திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கீழ் மேனி
கிராமத்தில் உள்ள சுமார் 90 ஏக்கர் பரப்பு ஏரியில் மழைக்காலங்களில்
தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கும், கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏரியில் உள்ள சவுடு மண்ணை அள்ளுவதற்காக மண் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக
கூறப்படுகிறது.
இதற்காக ஏரியின் கரையை சேதப்படுத்தி சரக்கு லாரிகள் வந்து செல்வதற்காக மண் அள்ளும் இயந்திரம் மூலம் தற்காலிக சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனை அறிந்து அங்கு திரண்ட கிராம மக்கள் ஏரியில் மண் அள்ளினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், மேலும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் மண் அள்ளும் ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்வு இடத்திற்கு வந்த வருவாய் அதிகாரிகள் போராட்டத்தை
கைவிட்டு கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்க மறுத்த கிராமமக்கள்
மண்குவாரி அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர்
போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் ஏரியில் தற்காலிக சாலை அமைக்கும்
பணியை மேற்கொள்ள வந்த மண் அள்ளும் இயந்திரம் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொன். கோ. முத்து