புறநகரில் மழைக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள்…

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபு சங்கர், புழல் ஏரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ஆய்வில் பங்கேற்றனர்.

ஆட்சியர் த.பிரபுசங்கர் பேட்டி


புழல் ஏரியில் உள்ள தற்போதைய நீர் இருப்பு, நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கரைகளின் உறுதித் தன்மை, உபரி நீர் வெளியேற்றப்படும் ஷட்டரின் பயன்பாடு குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பேட்டியின் சுருக்கம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை ஆய்வு செய்து வருகிறோம்.


சென்னை குடிநீர் ஏரிகள் அனைத்தும் 24 மணி நேரமும் நீர்வளத்துறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் உள்ளது.
தற்போதைய சூழலில் புழல் ஏரியில் 80 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
பருவமழைக் காலங்களில் ஏரிகளுக்காக வழங்கப் பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், எல்நினோ ஆண்டு என்பதால் மழைக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து, புழல் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றுவது குறித்தும் முடிவு செய்யப்படும்.


நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. முன்னுரிமை அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கொசத்தலை, ஆரணி ஆறுகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள பட்டுள்ளதால் கடந்த காலங்களில் ஏற்பட்டது போல மழை வெள்ள பாதிப்பு ஏற்படாது. மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய இருவகையான பாதிப்புகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கும் மழைக்குப் பின்னர் தேங்கக் கூடிய நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *