அரிசி மீதான வரி விதிப்பு என்பது மத்திய மாநில அரசின் கூட்டுச் சதியே என்று குற்றஞ்சாட்டியுள்ளது, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை. “2023 மே மாதம் ஐந்து தேதிகளுக்குப் பின்னர் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்” என்று பேரவைத்தலைவர் த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பேரவையின் மாநிலத் தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டார்.
அப்போது, மே 5 -ல் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில், சிறு வணிகர்கள் உரிமை மீட்புக்கான 40-வது மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடந்தது. கூட்டத்தின் முடிவில், த.வெள்ளையன் செய்தியாளர்களிடம் பேசினார். “இதுவரை எந்தக் காலத்திலும் அரிசி மீது வரி விதிப்பு என்பது இருந்ததே கிடையாது. இப்போது அரிசிக்கும் வரி கொண்டு வந்து விட்டனர். மத்திய அரசுக்கு ஒரு பங்கும், மாநில அரசுக்கு ஒரு பங்கும் என இரண்டு அரசுகளுமே கூட்டுச்சதி செய்து அரிசி மீது வரி விதித்துள்ளனர். மே 5- ஆம் தேதி நடைபெறுகிற மாநாட்டுக்குப் பின்னர், அரிசி மீதான வரியை ரத்து செய்யக் கோரி மத்திய – மாநில அரசுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்” என்றார் வெள்ளையன். பொன்.கோ.முத்து