அரிசி தட்டுப்பாடு! இதுதான் காரணமா?

தமிழகத்தில் விலைவாசி உயர்வு நாளுக்குநாள் உச்சம்தொட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை உயர்வை தொடர்ந்து, சமையலுக்கு பயன்படுத்தப் படக்கூடிய பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட எல்லா பொருட்களும் விலை அதிகரித்துள்ளது. தற்போது அரிசி, சோளம் போன்ற உணவுப் பொருட்கள், இம்மாதம் 18ம் தேதி முதல் 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ்கொண்டு வருவதற்கான அறிவிப்பை ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டது. அத்தியாவசியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதால் அரிசி உள்ளிட்டவற்றின் விலை மேலும் உயரும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சில மாதங்களுக்குப் முன்பு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்ற அரிசி, தற்போது 60 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. 25 கிலோ மூட்டை கடந்த மாதம் ரூ.1,400 ஆக இருந்தது, தற்போது அதுவே ரூ.1,600 ஆகவும், 2-வது ரக சாப்பாட்டு அரிசி, ரூ.1,200-ல் இருந்து ரூ.1,400 ஆக அதிகரித்துள்ளது. மளிகை பொருட்கள் விலையை தொடர்ந்து அரிசி விலையும் உயர்ந்ததால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். உள்நாட்டில் உற்பத்தி குறைவு மற்றும் போதிய கையிருப்பு இல்லாததால் வெளிநாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அரிசி தட்டுப்பாடு நிலவியதால், அங்கு வாழும் இந்தியர்கள் வரிசையில் நின்று அரிசியை வாங்கிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரிசி மற்றும் நெல் மொத்த விற்பனை வணிகர் சங்க தலைவர் துளசிங்கம் (படம்) கூறுகையில், “தமிழகத்தைப் பொறுத்தவரை விலை உயர்வு, அரிசி தட்டுப்பாடு ஏதும் இல்லை. தற்போதைய நிலவரப்படி இரண்டு மாதத்திற்கு தேவையான அரிசி சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளிடம் கையிருப்பில் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் ஆந்திரா, தெலங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும்,
அரிசி கொள்முதல் செய்யப்படும். பேரிடர் காலங்களிலேயே தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு இல்லை.

சீசன் காரணமாகவும், வாகன வாடகை உயர்வு, நடுவண் அரசின் 5% வரி உயர்வு போன்ற காரணங்களால் கிலோ ஒன்றுக்கு இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை உயர்த்தப் பட்டுள்ளது. எத்தகைய நிலையிலும் அரிசி கட்டுப்பாட்டிற்கு வாய்ப்பில்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. நடுவண் அரசு விதித்துள்ள அரிசி மீதான 5 சதவீத வரியை திரும்ப பெற வேண்டும்” என தமிழ்நாடு அரிசி மற்றும் நெல் மொத்த வியாபார வணிகர் சங்கத் தலைவர் துளசிங்கம் தெரிவித்தார்.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *