சென்னையில் மாலை -இரவு வேளைகளில் மட்டும் கடந்த இரு தினங்களாக மழைப் பொழிவு இருந்து வருகிறது. இரண்டு நாள்கூட முழுநாள் பொழிவில்லாத இந்த மழைக்கே சென்னையின் பல பகுதிகளில் வெள்ளநீர் தள்ளாட்டம் போடுகிறது.
மக்கள் குறைகளைத் தீர்க்கக் கூடிய சென்னைபெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வேப்பேரியில் சற்றே கூடுதல் தள்ளாட்டத்தில் இருக்கிற தேங்கிய மழைநீர்!
போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் பின்புறம் உள்ளது, ஜோதி வெங்கடாசலம் தெரு. ஏற்கெனவே பதினைந்து நாட்களாக சாலையில் சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருப்பதாக இந்தப் பகுதி மக்கள் புலம்பித் தீர்த்துள்ள நிலையில், இப்போது மழை வெள்ளமும் சேர்ந்து கொண்டு விட்டது.
தண்ணீர் தேங்கி நிற்காமல் ஓட ஒருவழியும் இல்லை. பிக்பாஸ் வீட்டுக்கு வந்த நீர் போல ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் கமிஷனர் அலுவலகத்தின் பின்புற வாசலில் சாக்கடை குட்டை நிரந்தர கொட்டகை போட்டுக் கொண்டிருக்கிறது.
போலீஸ் உயரதிகாரிகள் தவிர, பிறர், கமிஷனர் ஆபீசுக்குள் நுழைந்தால் நுழைவு வாயில் எண் – 2 -ன் வழியாகத்தான் வெளியில் செல்லவேண்டும் என்பது, அங்குள்ள அமைப்பு சார்ந்த விதிமுறை. போலீசார் நுழைவதாக இருந்தால், நுழைவு எண் -4 -ன் வழியாகத்தான், போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குள் நுழைய வேண்டும். நுழைவு வாயில் எண் 2 மற்றும் 4 ஆகிய இரண்டுமே ஜோதி வெங்கடாசலம் தெருவில்தான் உள்ளது. உயரதிகாரிகள் நுழைவு என்பது ஈவெகி சம்பத் சாலையில் உள்ளது.
போலீசார், மினிஸ்ட்ரியல் ஸ்டாஃப் (அமைச்சுப் பணியாளர்கள்), பொதுமக்கள் என பலருக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாக்கடையும் மழைநீரும் கலந்துள்ள பகுதி வழியே செல்ல தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு வழியின்றி அதே வழியை பயன்படுத்துகிற நிலையும் இதனால் ஏற்பட்டுள்ளது.
துணை கமிஷனர் அந்தஸ்து முதல் கமிஷனர் அந்தஸ்து வரையுள்ள போலீஸ் உயரதிகாரிகள், வேப்பேரி ஈவெகி சம்பத் சாலை அமைந்துள்ள பிரதான கேட் (நுழைவாயில் 1) 1- ன் வழியாக உள்ளே போய் அதே வழியாக வெளியே போய் விடுவதால், பின்னால் இருக்கும் இந்த கள நிலவரம் கவனிக்கப்படாமலே இருப்பதாக போலீசார் வேதனையை தெரிவிக்கின்றனர்.
சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர், மாநகர மேயர் – துணை மேயர் ஆகிய மூவரும் அமர்ந்து பணியாற்றக் கூடிய இடத்துக்கும், வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளி ஒரு கிலோ மீட்டர் தூரம்தான். பகுதி மண்டல மாநகராட்சி அதிகாரிகளாவது இதை அவர்கள் கவனத்துக்கு கொண்டு போயிருக்கலாம்.
போலீஸ் கமிஷனர் ஆபீசில் பணியாற்றும் பலருக்கு(ம்), பல்வேறு உடல் உபாதைகள் இருக்கிறது… குறிப்பாய் வாந்தி, மயக்கம், தலை சுற்றல், ஒவ்வாமை… கழிவு நீர்க் குட்டையோடு மழைநீரும் கலந்து தேங்கிக் கிடப்பதால்தான் இது நிகழ்ந்தது என்றெல்லாம் சொல்ல விருப்பமில்லை !
பாத்து செய்யுங்க, ஆபீசர்ஸ்… விகடகவி எஸ். கந்தசாமி