திருவள்ளூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு தொடர் வண்டி மீது விரைவு தொடர்வண்டி மோதி விபத்துக்குள்ளானது நாச வேலை காரணமா என தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட கவரப்பேட்டை தொடர்வண்டி நிலையம் அருகே நேற்று இரவு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை வழித்தடம் மார்க்கமாக தர்ங்கா நோக்கி 1360 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விரைவு தொடர்வண்டி, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு தொடர்வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 19 பேர் காயம் அடைந்த நிலையில் படுகாயம் அடைந்த நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்து காரணமாக வட மாநிலங்களில் இருந்து சென்னை வரும் விரைவு தொடர் தொடர்வண்டி மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பயணிகள் தொடர்வண்டி சேவை முற்றிலுமாக முடங்கியது.
இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், தென்னகத் தொடர்வண்டி துறை பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆகியோர் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்வண்டி துறை ஊழியர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் விபத்து தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர். சேதமடைந்த விபத்துக்குள்ளான விரைவு தொடர் வண்டியின் பெட்டிகளை இருப்பு பாதையில் இருந்து அப்புறப்படுத்தும், பணியும் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இதற்காக 300க்கும் மேற்பட்ட தொடர்வண்டி துறை ஊழியர்கள் பொறியாளர்கள், மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி பொன்னேரி தொடர்வண்டி நிலையத்தில் சிக்னலுடன் இருப்பு பாதையை இணைக்கும், பெட்டியின் நான்கு போல்ட் நெட்டுகளை மர்ம நபர்கள் கழற்றி வீசி எரிந்த சம்பவமும், அதற்கு முந்தைய நான்கு தினங்களுக்கு முன்பு புலிக்குளம் பகுதியில் இருப்பு பாதையுடன் இணைக்கப்படும் காங்கிரீட் கற்களின் 95 இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது நடைபெற்றுள்ள விரைவு தொடர்வண்டி விபத்து சம்பவம் நாச வேலை காரணமாக நடைபெற்றதா என தேசிய பாதுகாப்பு முகமை துணை கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் நிகழ்விடத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.
நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சற்று தோய்வு ஏற்பட்டுள்ள போதிலும், சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, தொடர்வண்டி சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை பொறியாளர்கள் மேற் கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தென்னக தொடர்வண்டித் துறைக்கு நடுவண் தொடர்வண்டி துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பயணிகளின் உடைமைகள் விபத்து நடத்த பகுதியில் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் இடுபாடுகளில் பயணிகள் யாரேனும் சிக்கி உள்ளனரா ? என்பது குறித்தும் மீட்பு குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
P.K.M.