ஃபல்சர் பைக்குகளை திருடி வந்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.
”பிக்கப்பு நல்லாருக்கும் சார்… ஃபல்சர் பைக்கை மட்டும் குறிவெச்சு திருடறது அதனாலதான், மார்க்கெட்லயும் நல்ல விலைக்குப் போவுது” என்று விசாரணை அதிகாரிகளிடம் திருவாய் மலர்ந்துள்ளனர், திருடர்கள்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஏரியாவில் தொடர்ந்து பைக்குகள் திருடு போவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததால், பைக் திருடர்களை பிடித்து கைது செய்வதில் தனி கவனம் செலுத்தும்படி போலீசாருக்கு கமிஷனர் எம்.ரவி உத்தரவிட்டிருந்தார்.
பைக் திருடர்களை கூண்டோடு பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தும் கமிஷனர் எம்.ரவி, துரிதம் காட்டினார்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் தனிப்படை போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
மணிமங்கலம் மற்றும் படப்பை போன்ற பகுதிகளில், பைக்குகள் திருடு போன இடத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு, அந்த கேமராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டது.
சிசிடிவி கேமரா ஆய்வில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன்(24), பார்த்திபன்(21) மற்றும் ஹரிஷ்(எ)சாமி (19) ஆகியோர், விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
ஒரத்தூர்சாலை, செரப்பனஞ்சேரி, கூடுவாஞ்சேரி, குபேரன்நகர், ஊரப்பாக்கம், மற்றும் ஒரகடம் போன்ற இடங்களில் திருடிய ஐந்து ஃபல்சர் பைக்குகள், குற்றவாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டது.
”பிக்கப்பு நல்லாருக்கும் சார்… ஃபல்சர் பைக்கை மட்டும் குறிவெச்சு திருடறது அதனாலதான், மார்க்கெட்லயும் நல்ல விலைக்குப் போவுது…
ஃபல்சர் பைக்குகள் மீது அதிக ஆர்வம் அதனால்தான் ஏற்பட்டது. திருடிய பைக்கை கொஞ்ச காலம் நாங்களே ஓட்டிக் கொண்டிருப்போம், பின்னர் அதை நல்ல விலை கிடைத்ததும் விற்றுவிடுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஐந்து பைக்குகள் மட்டுமல்லாமல், இன்னும் பத்து பைக்குகளை எங்கெங்கு யார் -யாரிடம் விற்றோம் என்ற தகவலையும் பிடிபட்டவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இது தவிர சங்கிலி பறிப்பு விவகாரத்திலும் தொடர்புள்ள இந்த இளைஞர்கள் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிவ.சுப்ரமணி