ஐயா குளத்த காணோமய்யா, குளத்த காணோம்… சீக்கிரமா கண்டுபிடிச்சு கொடுங்கய்யா… என்று கையில் பதாகை (பேனர்) யுடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் இன்று (10.4.2023) காலை ஒருவர் நுழைந்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர்தான், ‘அய்யா, குளத்தை காணோமய்யா, சீக்கிரமா கண்டுபிடிச்சு குடுங்க’ என்றபடி பதாகையுடன் வந்தவர்.
சிவகுமாரின் வேதனையை யாரும் காதுகொடுத்து கேட்காததால் அலுவலக நுழைவாயில் முன்பாக அமர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ள குளங்களை மீட்கக் கோரி, சிவகுமார் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.
சிவகுமாரின் குரலை நாமும் கேட்காமல் போனால் எப்படி? கேட்டோம்.
“பூதூர் ஊராட்சியில் பதினைந்துக்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தது. சர்வே எண். (36) (38) (42) (74) (188) (342) (344) ஆகிய ஏழு குளங்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் அடுத்தடுத்து சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். ஆண்டுக் கணக்கில் அந்தப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்காகவும், கால்நடைகளை பராமரிக்கவும் குளங்களின் நீரைதான் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்தக்குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கிடக்கிறது. யாராரோ ஆக்கிரமித்து தங்கள் சொத்துபோல ஆக்கிக் கொண்ட குளங்களை மீட்பதோடு, அதை மொத்தமும் தூர்வாரி பாசன பயன்பாட்டிற்குக் கொண்டு வரக்கோரி பலமுறை மனு கொடுத்து விட்டேன். வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரையிலும் புகார் கொடுத்துப் பார்த்து விட்டேன். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை”- என குமுறினார், சிவகுமார்.
சிவகுமாரின் புகார் மனுவை, அலுவல் பணியில் இருந்த துணை வட்டாட்சியர் பாரதி பெற்றுக் கொண்டது சற்றே ஆறுதலும், மகிழ்ச்சியும். அதே வேளையில், புகார்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக, துணை வட்டாட்சியர் பாரதி அளித்த உறுதியால் தற்காலிகமாக போராட்டத்தை கை விடுவதாக சிவகுமார் தெரிவித்தார்.
இதேநிலை இனியும் தொடர்ந்தால் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்வேன் என்றும் சிவகுமார் கூறினார். கிணறு வெட்ட வங்கியில் கடனை வாங்கிவிட்டு கடனை திருப்பி செலுத்தாமல் வெட்டிய கிணறு மாயமாகிவிட்டதாக போலீசில் பொய்ப்புகார் அளித்து வைகைப்புயல் வடிவேலு செய்யும் அலப்பறை போல அல்லாமல் நிஜமாகவே காணாமல் போன கிணறை மீட்டுத்தரக்கோரி சிவகுமார் கொடுத்துள்ள புகார், இந்த மண்ணின் மீதான நேசத்தின் பாசத்தின் வெளிப்பாடே ! பொன்.கோ.முத்து