பள்ளிமாணவியான சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சாமியாடி குறி சொல்லும் பிரசாந்த் என்ற ஆசாமியை போலீசார் கைது செய்து, நீதிமன்ற நேர் நிறுத்தலுக்குப் பின், சிறையில் அடைத்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் ராமானுஜபுரத்தை சேர்ந்த ஒருவர், திருப்பெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரில், ‘பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் தமது மகளுக்கு, அய்யனார் கோயிலில் குறி சொல்லும் சாமியாடியான பிரசாந்த் என்ற ஆசாமி பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வருகிறார்; அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சொல்லியிருந்தார்.
திருப்பெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இந்த புகார்மீது விசாரணை மேற்கொண்டனர். அப்போது, புகார்தாரரின் மகள், அய்யனார் கோயிலுக்கு போகும் போதெல்லாம், அவரை சாமியாடி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், சிறுமியை மிரட்டி, சுங்குவார் சத்திரம் பகுதியில் ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை மோசமான சூழலில் வீடியோ படம் எடுத்து சிறுமியின் தந்தையிடமே அதைக் காட்டி பணம் பறிக்கும் முயற்சியிலும் பிரசாந்த் ஈடுபட்டதுதான் உச்சக்கட்ட அக்கிரமம் என்கிறது போலீஸ் தரப்பு…
பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த சாமியாடி பிரசாந்தை கைது செய்த போலீசார், அவர்மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு வழக்குகளை பதிவு செய்து நீதிமன்ற நேர்நிறுத்தலுக்குப் பின், சிறையில் அடைத்தனர். சிவ. சுப்ரமணி