சென்னைக்கு கூடுதலாக இரண்டு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள கொளத்தூர் மற்றும் கோயம்பேடு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகங்களுக்கு புதிதாக இரண்டு துணை கமிஷனர்கள் நியமிக்கப் படுகிறார்கள். இதன் மூலம் முன்பு இருந்தது போன்றே 12 துணை கமிஷனர்கள் அலுவலகங்கள் மீண்டும் சென்னைக்கு கிடைத்துள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதிகளாய் இருந்து வந்த ஆவடி மற்றும் தாம்பரம் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு ஜனவரி-2022-ல் இரண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் புதிதாய் அமைக்கப்பட்டது. தாம்பரம் கமிஷனரேட்டுக்கு மு.ரவி, ஆவடி கமிஷனரேட்டுக்கு சந்தீப்ராய் ரத்தோர் போலீஸ் கமிஷனர்களாக நியமிக்கப்பட்டனர். அதுவரை சென்னையில் இருந்த அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகம், ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.
மே-2022-ல் சட்டசபையில் போலீஸ் மானியத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டது போன்று, கோயம்பேடு மற்றும் கொளத்தூர் ஆகிய இரண்டு போலீஸ் துணை கமிஷனர் (DCP) அலுவலகங்கள் உருவாகியுள்ளன. கொளத்தூர் துணை கமிஷனர் கட்டுப்பாட்டில் வருகிற கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் புழல் ஆகிய மூன்று இடங்களுக்கும் தனித்தனி உதவி கமிஷனர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அதே போல், கோயம்பேடு துணை கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் கோயம்பேடு, வளசரவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களுக்கும் தனித்தனி உதவி கமிஷனர்கள் நியமிக்கப் படுகிறார்கள்.
ராஜமங்கலம், கொளத்தூர், பெரவள்ளூர், வில்லிவாக்கம், புழல், ஐசிஎஃப், மாதவரம் மற்றும் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையம் போன்றவை கொளத்தூர் துணை கமிஷனர் கட்டுப்பாட்டில் வருகிறது. அதேபோல், கோயம்பேடு, வளசரவாக்கம், விருகம்பாக்கம், மதுரவாயல், ராமாபுரம், சிஎம்பிடி மற்றும் வளசரவாக்கம் – விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், கோயம்பேடு போலீஸ் துணை கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகமே தற்போது மறு கட்டமைப்பின் கீழ், கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகமாக மாறுகிறது. அதே வேளையில், தி.நகர் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளையும் இணைத்து கோயம்பேடு துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம் என்பது புதிதாய் உருவாக்கப் பட்டுள்ளது. விரைவில் இவை நடைமுறைக்கு வருகிறது! ந.பா.சேதுராமன்