முதியோர் ஓய்வூதியம்!அதிகாரிகள் குளறுபடி… பிச்சை எடுக்கும் மூதாட்டி !

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பங்கஜம். பங்கஜத்தின் வயதும் வறுமையும் புகைப்படத்தை பார்த்தாலே போதும், சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கணவர் சுப்ரமணி, பங்கஜத்தின் இளமைக்காலத்திலேயே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். பிள்ளைகள் இல்லை. உடம்பில் உழைக்க தெம்பு இருந்த வரையில் அன்றாடக் கூலிவேலைகளுக்கு போய் அதில் கிடைத்த வருவாயில் வாழ்க்கை நடத்தி வந்தார். முதுமையும் ஆதரவற்ற தனிமையும் கைகோர்த்துக் கொள்ள உடம்பில் தெம்பும் இழந்த நிலையில், கூலி வேலைகளுக்கு போக முடியாமல் கிடந்தவருக்கு யாரோ ஒரு புண்ணியன் காட்டிய வழியில் முதியோர் உதவித் தொகையை மாதந்தோறும் பெற்று அதில் உயிர்க்காற்றை செலுத்தி வாழ்ந்துவந்தார். சற்றேர 20ஆண்டுகள், பங்கஜம் வாழ்வதற்கு தமிழ்நாடு அரசு வழங்கி வந்த முதியோர் உதவித் தொகை, உதவியாய் இருந்தது. கடந்த ஆண்டு (2022) அந்த உதவித்தொகை உதவாமல் போனது.

பங்கஜத்தின் உதவித்தொகை திடீரென நிறுத்தப் பட்டது. உதவித்தொகை நிறுத்தப்பட்டது தொடர்பாக, வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை முதுமையிலும் விடாது படிப்படியாய் படியேறிய பங்கஜம் கால்கள் தேய்ந்ததுதான் மிச்சம்! பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக சாலையில் ஒருவேளை உணவிற்காக வருவோர் போவோரிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு, பங்கஜம் தள்ளப்பட்டு விட்டார். உற்றார் உறவினர் யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் வட்டாட்சியர் (ம) ஆட்சியர் அலுவலக வாசல்களில் ஏக்கத்துடன் ‌ காத்து இருக்கும், பங்கஜங்கள் கண்ணில் பட்டால் கொஞ்சம் நின்று பேசி, தேவை எதுவென விசாரித்து உதவ முன் வந்தால் நீயும் என் தோழனே…

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *