வேளச்சேரி – பள்ளிக்கரணை மேம்பாலங்கள் மீது நிறுத்தப்பட்ட கார்களுக்கு போக்குவரத்துப் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
வாகனங்கள் பயணிக்கும் மேம்பாலங்கள் மீது கார்களை பார்க்கிங் செய்தால் போலீசார் அபராதம் விதிக்கத்தான் செய்வார்கள்.
வாகனங்களை பகலில் நிறுத்தினால் மட்டும்தான் அபராதம் என்கிறார் பத்திரிகையாளர் திரு. குங்குமம் சுந்தரராஜன்.
நாங்கள் அபராதமே விதிக்கவில்லை என்று அதன் பின்னர் போலீசார் மறுப்பு தெரிவித்தனர். மேம்பாலத்தின் மீது அணிவகுத்த கார்களின் முகப்பில் போலீசார் காகிதத்தை ஒட்டிவிட்டுப் போன காட்சிகள் இப்போதும் பொது வெளியில் காணக்கிடக்கிறது – எதை ஒட்டினார்கள் என்றுதான் தெரிய வில்லை.
இங்கே சொல்லவேண்டிய முக்கிய சேதி : வடசென்னை வள்ளலார்நகர் பார்த்தசாரதி மேம்பாலத்தின் இருபுறமும் வேன்கள், கார்கள், தனியார் பேருந்துகள் என தொடக்கம் முதல் இறக்கம்வரை காலை முதல் அணி வகுப்பது அன்றாட காட்சியாக உள்ளது. நல்வாய்ப்பாக விபத்து ஏதுமில்லாமல் நாள்கள் நகர்கிறது.
வேளச்சேரி – பள்ளிக்கரணை மக்களின் கள நிலவரம் என்னவென்றால், “தாராளமாக அபராதம் விதியுங்கள், ‘மிஸ்டர் ஸ்கை’ ஏரியாவில் அவரது வேலையை முடித்துவிட்டுப் போகும் போது நாங்களும் எங்கள் வாகனத்தை அபராதம் செலுத்தி விட்டு எடுத்துப் போகிறோம்” என்பதாக பதில் இருக்கிறது.
மழையும் வெள்ளமும் உடைமை சேதாரமும் கொடுத்த கடந்தகால படிப்பினைகள் கசப்பான அனுபவமாக மக்களின் மனதில் வேரூன்றி நிற்கிறது. அனுபவத்தின் நீட்சியாகத்தான் வாகனங்கள் இடம் பெயர்ந்து நிற்கிறது.
அபராதம் விதிக்கும் போலீசாரை குறை சொல்வதும் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை என்று மல்லுக்கட்டும் மக்கள் செயல்பாட்டில் குறை காண்பதும் தேவையற்ற ஒன்றே என சொல்லத் தோணுகிறது.
இந்த மழைப்பொழிவுக்குப் பின்னர் தான், மக்கள் செய்தது சரியா தவறா என்று தெரியவரும். தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் தெரிவித்துள்ள முன்னேற்பாடு குறித்த விஷயங்களை பார்க்கும் போது பெரு வெள்ளம் வந்தாலும் பெரிதாய் சிக்கல் இருக்காது என்ற என்னுடைய நினைப்பு மெய்ப்பட விரும்புகிறேன்.
ந.பா.சேதுராமன்