Madras Kural

ஆன் லைன் ரம்மிக்கு தடை !
வருகிறது அவசரச் சட்டம்…

ஆன் லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச்சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.06.2022) உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை :
”இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த 25-2-2021 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கடந்த 3-8-2021 அன்று வழங்கிய தீர்ப்பில் இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனை ரத்து செய்தது மேலும் இச்சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூர்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 13-11-2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை மேலும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று (9-6-2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும் இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும்;

இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே சந்துரு அவர்கள் தலைமையில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன் ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார் காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது

மேற்குறிப்பிட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரிச் சட்டமாக அமையும்…
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 7 -2022 தேதியிட்ட நமது ‘மெட்ராஸ்குரல்’ இணையத்தில், http://madraskural.com/online-rummy-game-moneyloss-suicide-death/
”தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் இதில் என்ன செய்ய முடியும் என்று பார்த்தால், ”மறைமுகமாகவே (அ) நேரடியாகவே ஒரு தீர்மானம் இயற்றி தமிழ்நாடு அளவில் இதன் மீது தடை விதிக்கலாம். முதற்கட்டமாக ஊடக ஓனர்களைக் கூப்பிட்டு, ’இது போன்ற விளம்பரங்களை வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக் கொள்ளலாம், கேட்பார்கள் என்று நம்புகிறேன்! கடந்த காலங்களில் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளான போது அதற்கு காரணமாக இருந்த பல விஷயங்களின் மீது தடை விதிக்கப் பட்டிருக்கிறது !
சிகரெட் மற்றும் புகையிலை விளம்பரங்களை விகடன் குழுமம் எந்நாளும் வெளியிடுவது இல்லை, காட்சி ஊடகங்களில் அதை கடைப்பிடிப்பது மக்கள் தொலைக் காட்சி – இதுபோன்ற சூதாட்ட விளம்பரங்களையும், ‘மக்கள் தொலைக்காட்சி’ ஒளிபரப்பு செய்வது இல்லை! சிலருக்கு சில பாலிஸி !” என்று எழுதியிருந்தோம்.
சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பாக்யராஜ் மனைவி பவானி, ஆன் -லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழந்த வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம், 2022- ஜூன்-6ஆம்தேதி, தமிழ்நாட்டையே உலுக்கியிருந்ததும், நமது கட்டுரைக்கு ஒரு காரணம்.

ஆன் லைன் சூதாட்டத்தை புதிய தடை சட்டம் மூலமே தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழிக்க முடியும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து அறிக்கைகளின் மூலம் வலியுறுத்தி வந்ததோடு, 2022- ஜூன் 10ஆம் தேதி, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது !
ந.பா.சேதுராமன்

Exit mobile version