Madras Kural

ஆன் -லைன் ரம்மி சாவுகள்
நாம் செய்ய வேண்டியது !

ஆன் -லைன் ரம்மி சரியா தவறா ? இருவேறு கருத்துகள் ஓடிக் கொண்டிருக்கிறது ! இன்னொரு பக்கம் பல்வேறு தீர்ப்புகள், ‘ஆன் -லைன் சூதாட்டம் அல்ல’ என்கிறது.
கடன் தொல்லையால் தற்கொலை என்ற தலைப்புகள், இப்போது ’ஆன் -லைன் ஆட்டத்தில் இறங்கி, கடன் வாங்கியதால் தற்கொலை !’ என்று கொஞ்சம் நீளமாகி இருக்கிறது.

ஆன் லைன் ரம்மி விளையாட்டு சாவுகளை தடுக்க உடனே மாநில அரசு நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்று ஒரே ஒரு (ஒரே ஒரு குருக்கள் வர்றார் வழிவிடுங்கோ) எதிர்க்கட்சி மட்டும் வலுவாய் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது, அதில் அரசியலும் இருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டின் எதிர்வினைச் சாவுகள், நேற்று காலை நாட்டுக்குள் வந்து விட்டது அல்ல; ஆச்சு பல ஆண்டுகள் !

அது சூதாட்டம்தான் என்று ஓப்பனாய் டிக்ளேர் செய்தாலே, காசு கொடுத்தால் போஸ் கொடுக்க மாடல்கள் வரிசை கட்டுவார்கள். ’அது சூதாட்டமே அல்ல’ என்று தீர்ப்பே வந்தபின்னர் விளம்பரப் பார்ட்டிகளால் சும்மா இருக்கமுடியுமா ? கிரிக்கெட்டர், சினி ஆக்டர், ஆக்டரஸ், பிக் ஷாட்ஸ் என்று பெரிய கியூவே விளம்பர ஏரியாக்களில் நிற்கிறது.

மனைவி, பிள்ளைகளை கொன்று போட்டு விட்டு கணவனும் தற்கொலை என்று வருகிற தலைப்புச் செய்திகளின் உள்ளே போனால், ஆன் – லைன் ரம்மி விளையாட்டில் லட்சத்தில் கடனாளி ஆகிப் போனவர், அந்த கணவர் என்று தெரியவருகிறது. அதற்குப் பக்கத்திலேயே ‘ஆன் – லைன் ரம்மி மூலம் அள்ளுங்கள் பணத்தை’ என்ற விளம்பரமும் இருக்கிறது – அதெல்லாம் ஊடக தர்மக் கணக்கில் வருவதால், கையேந்தி பவனில் சாப்பிடுகிற நான் பேச முடியாது!

நேற்றைய செய்திகளில் ஆன் -லைன் ரம்மி சாவுகளில் புதுவிதமாய் ஒரு சாவுச் செய்தி பார்த்தேன், செத்துப் போயிருந்தது ஒரு பெண் ! ஆண் – பெண் சமம் என்று ஆதி சிவனே அர்த்தநாரீஸ்வரர் காட்சி ஆக சாட்சி சொன்ன பிறகு சூதாட்டத்தில் என்ன பாகுபாடு ?
செய்திக்குள் போய்ப் பார்த்தால், இரண்டு லட்ச ரூபாய், இருபது சவரன் நகை மற்றும் அங்கிங்கு வாங்கிய கடன் தொகை மூன்று லட்சம் என சூதாட்டத்தில் அந்தப் பெண் இழந்திருக்கிறார். ஐ.டி. பார்க் ஏரியாவில் வேலை பார்க்கிறாராம். சென்னை மணலியில் இருந்து ரயிலைப் பிடித்து இருக்கை கிடைத்ததுமே, மொபைலில் ‘ஆன் -லைன் -ரம்மி’ ஆட்டத்தை தொடங்கி விடுவாராம் (செய்தியில் இப்படித்தான் போட்டிருக்கிறார்கள், நான் பார்க்கவில்லை)… இரண்டு குழந்தைகள், கணவர் என்று அழகாய் கட்டமைக்கப்பட்ட குடும்பம். தொப்புள் கொடி உறவை இழந்து பிள்ளைகள் தவிக்கிற நிலைமை ! அந்த செய்திக்கும் பக்கத்தில், ‘ஆன் -லைன் ரம்மி ஆட்டத்துக்குள் வாங்க, கார் – பங்களா என்று அள்ளுங்க, ஆட்டத்துக்குள் இறங்கும் போதே போனஸா உங்களுக்கு இவ்வளவு தர்றோம்’ என்று தொகையையும் சேர்த்தே விளம்பரத்தில் போட்டிருக்கிறார்கள் ! ஊடக ’தர்ம’ ஏரியாவுக்குள் நாம் போக விரும்பவில்லை என்பதால், படித்ததை மட்டும் இங்கே பகிர்கிறேன் !
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் இதில் என்ன செய்ய முடியும் என்று பார்த்தால், ”மறைமுகமாகவே (அ) நேரடியாகவே ஒரு தீர்மானம் இயற்றி தமிழ்நாடு அளவில் இதன் மீது தடை விதிக்கலாம். முதற்கட்டமாக ஊடக ஓனர்களைக் கூப்பிட்டு, ’இது போன்ற விளம்பரங்களை வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக் கொள்ளலாம், கேட்பார்கள் என்று நம்புகிறேன்! கடந்த காலங்களில் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளான போது அதற்கு காரணமாக இருந்த பல விஷயங்களின் மீது தடை விதிக்கப் பட்டிருக்கிறது !
சிகரெட் மற்றும் புகையிலை விளம்பரங்களை விகடன் குழுமம் எந்நாளும் வெளியிடுவது இல்லை, காட்சி ஊடகங்களில் அதை கடைப்பிடிப்பது மக்கள் தொலைக் காட்சி – இதுபோன்ற சூதாட்ட விளம்பரங்களையும், ‘மக்கள் தொலைக்காட்சி’ ஒளிபரப்பு செய்வது இல்லை! சிலருக்கு சில பாலிஸி !
ந.பா.சேதுராமன்.

Exit mobile version