ஆட்டிசம் போன்ற நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு (neurological and developmental disorder) உள்ள குழந்தைகளுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் கிடையாது.
இவர்களில் பலருக்கு தெரபி போன்ற வகுப்புகளுக்கும் அதிகச் செலவு ஆகும் என்பதாலும் வலிப்பு போன்ற பல நரம்பியல் சிக்கல்கள் உண்டு என்பதாலும், காப்பீடு என்பது மறுக்கப் படுவதாகச் சொல்கின்றனர்.
சில பெற்றோர்கள், “தெரபி வகுப்புகள் வேண்டாம், நரம்பியல் சார்ந்த எந்தப் பிரச்சினைகளுக்கும் இன்சூரன்ஸ் வேண்டாம்; விழுந்துவிட்டாலோ, விபத்துகள் அடி, காயம் ஏற்பட்டாலோ, சாதாரணமாக மனிதர்களுக்கு வரக் கூடிய இதர நோய்கள் இதுபோன்ற குழந்தைகளுக்கு வந்தால் அதற்கு மட்டுமாவது ‘காப்பீடு -கவரேஜ்’ கொடுங்கள்” என்று சொல்கின்றனர். ஆனால் அரசின் காதுக்கும் IRDAI காதுகளுக்கும், அந்தப் பெற்றோரின் வேண்டுகோள் கேட்கவே இல்லை.
இந்த லட்சணத்தில் தான், சிறப்புத் தேவை உடைய குழந்தைகளுக்கு ‘திவ்யாங்ஜன்’ என்று புதிய பெயர் சூட்டி மகிழ்கிறது அரசு. (திவ்யாங்ஜன் என்றால் தெய்வக்குழந்தை என்று பொருளாம் !?)
மருத்துவக்காப்பீடு எடுக்க, தவணை கட்ட, பணம் இருந்தும் காப்பீடு எடுக்க இயலாமல் மறுக்கப்பட்டு எத்தனை சிறப்புக்குழந்தைகளின் குடும்பம் அவதிக்குள்ளாகின்றன என்பது பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதாலேயே இந்தப் பதிவு.
இதுபோக இவர்களுக்கு ‘நிராமயா’ என்னும் தனி காப்பீடும் உள்ளது. அதை எடுப்பதும் குதிரைக்கொம்பு தான். சிறப்புக்குழந்தைகள் என்று அரசுகள் குறிப்பிடும் ஆட்டிசப் பிள்ளைகளின் வாழ்க்கை அத்தனை சிறப்பானதாக இல்லை என்பதும் அதற்கு வளைந்து கொடுக்காத சட்டவிதிகளை தோளில் சுமந்து கொண்டிருக்கும் அரசுகளுமே காரணம் என்பதும் மட்டுமே உண்மை.
பாலா