ஹரியானா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான குதிரையேற்றப் போட்டியில் சென்னை பெருநகர போலீஸ் டீம், 3 தங்கம் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என ஆறு பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளது. 02.04.2022 முதல் 11.04.2022 வரை, ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா, பானு, ITBP வளாகத்தில் 40வது அகில இந்தியக்காவல் குதிரைப் படையினருக்கான குதிரையேற்றப் போட்டி நடைபெற்றது. போட்டியில் சென்னை போலீஸ் குதிரைப் படை டீமிலிருந்து 21 பேர் பங்கேற்றனர். போட்டியின் முடிவில், சென்னை டீமுக்கு 3 தங்கப்பதக்கம், 2 வெள்ளிப் பதக்கம், 1 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களும் கேடயங்களும் கிடைத்தது. வெற்றி வீரர்கள் மெடல்கள், கேடயங்களோடு சென்னை திரும்பினர். வெற்றி பெற்ற சென்னை குதிரைப் படையினரோடு, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
சென்னை தலைமையிட கூடுதல் கமிஷனர் முனைவர். J.லோகநாதன், தலைமையிட இணை கமிஷனர் பி. சாமுண்டீஸ்வரி, தமிழ்நாடு சிறப்பு காவல் 6ம் அணி தளவாய் தேஷ்முக் சேகர் சஞ்சய், மோட்டார் வாகனப் பிரிவு துணை கமிஷனர் கோபால், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் நிகழ்வில் திரளாகப் பங்கேற்றனர். பயிற்சியாளர்கள், குதிரைகளின் பராமரிப்பாளர்கள், குதிரையேற்றத்தில் வெற்றியைப் பறித்தவர்கள் என அனைவரையும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
– விகடகவி எஸ். கந்தசாமி.