நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தொடரும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள் பொதுமக்கள். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், நடவடிக்கை மேற்கொண்டு அவ்வப்போது ரேசன் அரிசி கடத்தலில் சம்மந்தப்பட்ட நபர்களை கைதுசெய்து வருகின்றனர். அதே வேளையில் வடசென்னை பகுதியில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் தொடங்கி, பேசின்பாலம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப் பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் போன்ற ரயில் நிலையங்களில் இருந்து சூலூர் பேட்டை மார்க்கம் செல்லும் ரயில்கள் மூலம் ரேசன்அரிசி கடத்தல் நடக்கிறது. அதிகாலை தொடங்கி இரவுவரை அரிசி கடத்தலுக்காக பெண்கள் பெட்டிகளைத்தான் பயன் படுத்துவதாக சொல்லப்படுகிறது. கொருக்குப்பேட்டையில் தொடங்கி கத்திவாக்கம் ரூட் வரையில் கணக்குப் பார்த்தாலே சற்றேர பத்து டன் எடைக்கு ரேஷன் அரிசி கடத்தல் நடப்பதாக கூறப் படுகிறது. மொத்தத்தில் தினமும் நூறு டன் எடைக்கு குறையாமல் ரயில் பயணப்பாதை வழியே ஆந்திராவிற்கு கடத்தல் அரிசிமூட்டை பயணிக்கிறது. இது சம்பந்தமாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகளோ, சமூக அக்கறை கொண்ட ஆர்வலர்களோ போலீசுக்கு தகவல் கொடுத்தால், தகவல் கொடுத்தவர்களையே அரிசி கடத்தல் கும்பலுக்கு காட்டிக் கொடுக்கிற நிலை சாதாரணம். இப்படி காட்டிக் கொடுப்பதால் காட்டிக் கொடுப்போர் அடையும் நன்மைகள் சற்று அதிகம் தான். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ், திருவொற்றியூர் ரயில்வே போலீஸ், கும்மிடிப்பூண்டி ரயில்வே போலீஸ் மற்றும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் என பலருக்கு இதில் பொறுப்பு அதிகம் உண்டு. மக்கள் உயிர்காக்கும் அரிசியை கடத்தல் பிடியிலிருந்து முழுதாக காப்பாற்றி விட்டால் போலீஸ்தானே மக்களுக்கு கடவுள்? அதுவரை…
ராஜ்