அதிர்ச்சி அளிக்கிறது!
கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மோதி விபத்து. தினபூமி நாளிதழ் உரிமையாளர் திரு. மணிமாறன் (65) சாலை விபத்தில் பரிதாப மரணம். உடன் காரில் பயணித்த மணிமாறனின் மகன்
ரமேஷ் படுகாயம். நெல்லையில் இருந்து மதுரை நோக்கிய பயணம். நாலாட்டின் புத்தூர் என்ற இடத்தில் விபத்து நடந்திருக்கிறது.
தினபூமி ஆசிரியர் திருநாவுக்கரசு இறப்புக்கு, கன்னியாகுமரி சென்று அன்னாரது உடலுக்கு மரியாதை செய்து விட்டு திரும்பும் வழியில்தான் தினபூமி உரிமையாளர் திரு. மணிமாறன் இன்று மாலை விபத்தில் இறந்துள்ளார் என்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கிற ஒன்று. ஊடகக் கனவுகளோடு சென்னை நோக்கி வரும் அத்தனைபேரின் கனவுகளையும் நனவாக்கிக் கொடுத்த மாற்றுக் கருத்தில்லா ஊடக தாய்வீடு தினபூமி என்றால் பொருத்தமாக இருக்கும்.
வேலை இல்லை, ஆள்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாய் நொட்டை சொல்லாமல், தெரிந்தே கதவுகளை திறக்காமல்- நுழைவு வழிப்பாதையை அடைத்துக் கொள்ளாமல்; ஒரே ‘பீட்’ டுக்கு ஐந்து பேரை கூட நியமித்து பலரின் பசிக்கும், பாதுகாப்புக்கும், கனவுகளுக்கும், எண்ணத்துக்கும் ஏற்றார் போல்; தினபூமியின் பயணம் இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
மொத்தத்தில் விமர்சனம்- வெறுப்புணர்வு இல்லாத பொதுப் பார்வையில் சொல்வதெனில் தினபூமி நிறுவனம் ஒரு கைகாட்டி விளக்கு.
என் மூலமாக மட்டும் டபுள் டிஜிட்டில் ஆள்களை அங்கே வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறேன். நான் அங்கு வேலை பார்த்தது இல்லை என்றாலும் ஆசிரியர் பொறுப்பில் இருந்த தோழர் புருசோத்தமன், தலைமை நிருபராக இருந்த நண்பன் கமலநாதன் (எ) கமல் (மூத்த பத்திரிகையாளரான சொ.க. (எ) சொ.கருணாநியின் மகன்) உள்ளிட்ட பலர் அன்றாடம் அளவளாவுதலில் இருந்தனர். கமலநாதன் இன்று இல்லை. இருந்திருந்தால் துடித்துப் போயிருப்பார்.
இன்று உச்சத்தில் இருக்கும் பலருக்கும் அச்சு ஊடகம் என்றால் தினபூமியும் காட்சி ஊடகம் என்றால் வின் டி.வி.யும் தான் மூடாத கதவுகளை கொண்டிருந்த நிறுவனங்கள். இவ்விரண்டுமே சென்னையில் அமைந்திருந்ததால் தலைநகர் நோக்கி வந்த விசுவல் கம்யூனிகேசன் பட்டதாரிகளின் விசுவலை பரந்துபட வைக்க தோதாக அமைந்து விட்டது.
மிகப்பெரிய அளவில் தீபாவளி மலர் பொங்கல் மலர் என ஒவ்வொரு மலரும் ஐந்து வால்யூம் எண்ணிக்கையில் கனக்க கனக்க வாசகர்களின் கைகளில் தினபூமி கொண்டுபோய் சேர்த்த ஒரு காலமும் உண்டு…
ந.பா.சேதுராமன்