மகா மதுரகவி வீ.வே. முருகேச பாகவதரின் பேரன் என்பதே தெரியாமல்தான் இவ்வளவு காலம் (Sunderesan Kumaresan) அண்ணன் சு.குமரேசனுடன் பழகி வந்திருக்கிறேன்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பவளவிழா அரங்கில் முனைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மொத்தமாய் கூடிநின்று பாகவதரின் ‘வாழ்த்துப்பா மலர்கள்’ பாகம் 1-ஐ வெளியிட்ட போதுதான், பாகவதரின் மீது பிரமிப்பு உண்டானது.
அண்ணன் சு.குமரேசன், அடிப்படையில் புகைப்படக்கலைஞர் என்பதாலோ தெரியவில்லை, விழாவில் பேராசிரியர்கள், முனைவர்கள், மாணவர்கள் மத்தியில் கேமராக் கலைஞர்கள் முகங்களே அதிகமாய் தெரிந்தது.
இத்தனை கேமரா ‘சாம்ராட்’ களுக்கு மத்தியில் செய்தியாளர்கள் என்ற அடையாளத்துடன் நானும், அண்ணன் ‘அறிவாலயம்’ டி.சேகர், சுட்டிவிகடன் கணேசன் (ம) து.ரமேசு இருந்தோம்.
அண்ணன்கள் நக்கீரன் கோபால், சாவித்திரிகண்ணன், உசேன், (Mehboob Hussain) ‘வைல்ட் ஆங்கிள்’ ரவிசங்கர், பொன்.காசிராஜன், நண்பர்கள் விஜய், செந்தில்நாதன், செந்தில்குமார், தம்பிகள் என்.விவேக், நக்கீரன் ஸ்டாலின் என்று, பலநூறு கேமரா உறவுகளை சந்திக்க கிடைத்த நல்வாய்ப்பு இது.
சிறுதானிய சுண்டல், அதே தானியத்தில் போண்டா மற்றும் பாயாசம், தேநீர் போக அண்ணன் திரு. குமரேசனின் அன்பான வரவேற்பும் நிகழ்வை மேலும் சுவைபட மாற்றியது.
தமிழ்த்தென்றல் திருவிக, பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தமிழ்ச்சான்றோர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே திரு. முருகேச பாகவதரின் தமிழை நேசித்து வாழ்த்துப் பாமாலை சூடியுள்ளனர்.
திருமிகு நக்கீரன் கோபால், முனைவர்கள் ஆ.மாணிக்கவேலு, ஆ.ஏகாம்பரம், U.சரவணன், கோ.பழனி க.ஜெயபாலன் விழாவில் சிறப்புரை ஆற்ற முனைவர் பெ.விஜயகுமார் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.
பாகவதரின் பேத்தியும் ஓய்வு பேராசிரியருமான முருகு.சுந்தரேச புனிதவதி, பாகவதரின் வாழ்த்துப் பா மலர்களை கோர்த்து நூலாக்கியுள்ளார்.
பொதுவெளியில், மகா மதுரகவி வீ.வே. முருகேச பாகவதர் குறித்து பெரிதாய் இதுவரை யாரும் பேசியதில்லை என்றே கருதுகிறேன்.
அரசுடைமையாக்கப்பட்ட கவிதைகளை படைத்தவரை இனிமேலாவது தமிழ்ச் சமூகம் கண்ணுற்று அவர்குறித்து பேசிடவும் எழுதிடவும் விழைய வேண்டும் என்பதே என் பேரவா…
ந.பா.சேதுராமன்