
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில், ‘குடி பராமரித்துப்பணி’ என்ற பெயரில் மணல் அள்ளுகிற டெண்டர் விட்டுள்ளனர். அங்கிருந்து நூற்றுக் கணக்கான லாரிகள், மணல் சுமையோடு வெளியில் வருகிற வழியில்; அதன் சுற்றுப்பகுதியில்; சற்றேர பத்து பள்ளிக் கூடங்கள் இயங்குகின்றன. அரசு, தனியார் மேல் நிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகள் என பரவலாகப் பல்வேறு பள்ளிகள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலவரத்தை தெரிந்தும், இந்தப் பகுதியில் நேரம் காலம் என்ற வரைமுறை ஏதுமின்றி; காலை 7 மணியிலிருந்து, மாலை 7 மணி வரை மிக சாதாரணமாக; ‘டாரஸ்’ மாடல் கனரக லாரிகளை, சுமையுடன் போய்வர அனுமதி கொடுத்திருக்கிறது அரசு நிர்வாகத் தரப்பு.
“அனுமதியை யார் கொடுத்தார்கள், எங்கள் வீட்டுப் பிள்ளைகள் விபத்து பயத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தினமும் போகிறதே” என்கிற பெற்றோர்களின் வேதனைக்குரல் மீது அதே “டாரஸ்” லாரிகளை ஏற்றி நசுக்கி தேய்க்காத வரை சிறப்புதான். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, நெடுஞ்சாலைத் துறை, லாரிகள் ‘மண்’ அள்ளிப்போக விட்டிருக்கும் கனிம வளத்துறை இதில் எடுக்கப்போகும் நடவடிக்கை, “இடைநிற்றல் கல்வி இல்லா தமிழ்நாடு” என்ற சொல்லுக்கு பெருமை சேர்ப்பதாக அமைய வேண்டும். மாணவர்கள் சாலையில் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் ‘டாரஸ்’ லாரிகள் சாலையை அடைத்துக் கொண்டும், ஒருவழிப்பாதையை இருபுறமும் கடப்பதும்; ஈரல் குலையை பிசைந்து விடுவது போல் இருக்கும் என்பது அன்றாடக் காட்சி ஆகும். மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல சிரமப் படுகின்றனர், பயப்படுகின்றனர். மாணவர்களுடைய உயிருக்கு அபாயம் ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த சூழலை உடனடியாக மாற்றி ஆட்சிக்கு நற்பெயரும், மக்களிடையே நம்பிக்கையையும் ஏற்படுத்தித் தர வேண்டியது காலத்தின் கட்டாயம். சொல்றதை சொல்லிட்டோம்.
“முடிஞ்சா பண்ணுங்க சாமி, முடியலேன்னாலும் சொல்லிடுங்க; ஒட்டுமொத்தமா ஊரை விட்டே வெளியேறிடறோம்; எங்களுக்கு ஊரு உறவு சொத்து எல்லாமே புள்ளைங்களோட உசுருதானே?” என்கிற கிராமத்து முகங்களில்தான் எத்தனை வேதனை – எத்தனை எதிர்பார்ப்பு….
டிஎஸ்எஸ்எம்

