பெண் ஊராட்சிமன்றத் தலைவர் பதவியை பறிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், கோட்டைமேடு ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பில் இருந்தவர், ஏ.ஜி.சர்மிளாஜி மோகன். சுயேச்சையாக வென்று தலைவர் பதவியைப் பிடிக்கும் அளவு, வித்தை தெரிந்த இவர் இத்தனை சீக்கிரம் சிக்கிக் கொண்டதுதான் வியப்பு.
ஏ.ஜி. சர்மிளாஜிமோகன், எம்.சி.ஏ.பட்டதாரி. 2019- ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்றார். பின்னர் அதிமுகவில் சேர்ந்தார். ஒரு ஓட்டில் தலைவர் பதவி ஊசலாடிய போது உள்ளூர் திமுகவுடன் இணைந்து தலைவர் பதவியை கைப்பற்றினார். சுயேச்சை ஒருவர், ஆண்டு கொண்டிருக்கும் (அதிமுக- 2019) கட்சிக்கு தாவி, தலைவர் பதவிக்காக, எதிர்காலத்தில் ஆளப்போகும் (திமுக) கட்சியுடன் பேச்சு வார்த்தை (பேரம்தான்! ) நடத்தி தலைவராக வருவது லேசுப்பட்ட ஒன்றல்ல.
2019- ல் தேர்தலில் வெற்றிபெற்ற நாற்பதாவது நாளே ஊராட்சிகளின் வருவாய் -நிதியில் 10லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை சர்மிளாஜி மோகன் கையாடல் செய்தது அம்பலப்பட்டு போயிருக்கிறது. வாடிப்பட்டி வட்டாட்சியரின் ஆய்வும் தணிக்கையும் கையாடலை உறுதி செய்ததோடு, விவகாரம் மதுரை ஐகோர்ட் கிளைக்கும் போய்விட்டது.
இந்நிலையில்தான் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், ஏ.ஜி.சர்மிளாஜிமோகன் பதவியைப் பறித்து உத்தரவிட்டுள்ளார். முறைப்படி ஆறுமாத காலத்துக்குள் அடுத்த ஊராட்சி மன்றத் தலைவரை தேர்வு (பார்த்து செய்யுங்க) செய்ய (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி) வேண்டும் – அதுவரை பொறுப்பு தலைவராக கதிரவன் என்பவர் நியமனம் செய்யப் பட்டுள்ளார். ஒரு சுயேச்சை தேர்தலில் வெற்றி பெற உள்ளூர் மக்களிடம் எந்தளவு நன்மதிப்பைப் பெற்றிருந்தால் அது சாத்தியம் என்பதை இந்த தருணத்தில் யோசிக்க வேண்டிவருகிறது. சர்மிளாஜி மோகன் போன்றோரின் செயல்பாடுகளால் ஒரு நல்லவனைக் கூட நல்லவன் என்று பிரகடனப்படுத்திட யாரும் முன்வராமல் போகும் நிலையே ஏற்பட்டுள்ளது. ந.பா.சேதுராமன்