சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான (உட்கட்சி) தேர்தல், பள்ளிக்கரணையில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் மந்திரிகள் பா.வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் தேர்தலுக்கு தலைமை தாங்கினர். எப்படியும் புதிய நிர்வாகத்தில் பொறுப்புகளை வாங்கியே தீரவேண்டும் என்று தொண்டர்கள் காலை எட்டுமணிக்கே திருமண மண்டப ஏரியாவுக்கு வந்து விட்டனர்.
ஆரம்பத்தில் கூட்டம் அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ’கட்சித் தேர்தல்ன்னு வந்துட்டா, கொஞ்சமாவது சட்டையும், வேட்டியும் கசங்கினாத்தானே களை கட்டும்’ என்ற கதையாக பகல் 12 மணிவரை அமைதியாகப் போய்க் கொண்டிருந்த கூட்டம், அதன்பின்னர் ட்ராக் மாறியது.
படை பரிவாளங்களோடு உள்ளே வந்த மாஜி. கவுன்சிலர் டி.சி.கருணா வேட்பு மனு குறித்தும் கட்சியின் மாநில மாணவரணி துணை செயலாளர் கோவிலம்பாக்கம் மணிமாறனைப் பற்றியும் எதையோ குறிப்பிட்டுக் கேட்க, அதற்கு யாரோ ஒருவர் தவறாக ரிப்ளை கொடுக்க, உட்கட்சித் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.
மாஜி. மந்திரிகள் இருவர் கண்முன்பாகவே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது அரை மணிநேரம் திருமண மண்டபமே, உள்ளூர் மார்க்கெட் போல் ஆனது. மகளிர் அணியினர், மண்டபத்தை விட்டு வெளியேற தொடங்கினர்.
. மாவட்ட செயலாளர், கே.பி.கந்தன், ”இருவரின் தனிப்பட்ட பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம், விவகாரத்தை இத்தோடு விடுங்கள்” என்று கேட்டுக் கொள்ள, கொஞ்சநேரத்துக்கு அமைதி திரும்பியது.
மீண்டும் சில நிமிடங்களில் ஏதோ ஒரு பொறி பற்றிவிட, தேர்தல் நடத்துவதற்காக வந்தவர்கள், போலீஸ் பாதுகாப்பு தேவை என உணர்ந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் வந்த பின் நிலைமை சற்றே சீரானது. மீண்டும் தேர்தல் பணிகள் 1.30.மணி வரை நடைபெற்றது.தேர்தலில் போட்டியிட வந்தவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினாலும், மாவட்டச்செயலாளரான கே.பி.கந்தன் என்னவோ பெரிதும் களைத்துப் போய்விட்டார்.
மக்கள் மத்தியிலும், அரசியல் தளத்திலும், கட்சியிலும் கெட்ட பெயர் ஏதும் வந்துவிடக் கூடாதே என்று, உட்கட்சித்தேர்தலில் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தார்.
உட்கட்சித்தேர்தல் காரணத்தால் செய்தியாளர்கள் பலர், செய்தி சேகரிப்புக்கு வந்து விட, அவர்களுக்கு மாவட்டச்செயலாளர் கே.பி.கந்தன் விளக்கம் கொடுத்தார்.
”இது போன்ற சில நிகழ்வுகள் நாம் எதிர்பாராமல் நடைபெற்று விடுகிறது. உட்கட்சித் தேர்தலில் அதை தவிர்க்க முடியாது. இது அவரவர் உரிமையை நிலை நிறுத்துவதற்கான காலகட்டம், இப்படித்தான் இருக்கும். பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை, வாக்குவாதம் தான் ஜனநாயக முறையில் இருந்தது. கழக தோழர்கள் கழகமே பெரிதென எண்ணி மீண்டும் கழகத்தின் கொடியை கோட்டையில் பறக்கவிடுவோம், வெற்றிக்கான வழியில் பயணிப்போம்” என்றார், கே.பி.கந்தன்.
,மாநில மாணவரணி துணை செயலாளராக, கோவிலம்பாக்கம் மணிமாறன் உள்ளார். ஆலந்தூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., வெங்கட்ராமன் போன்றோரும் புறநகர் மாவட்டக் கழக செயலாளர் பதவியில் போட்டியிட இந்தக் கூட்டத்தில் விருப்ப மனு அளித்துள்ளனர்.
போட்டியின்றி வெற்றி பெறுகிற எதிர்பார்ப்பு மனநிலையில் இருந்த, தற்போதைய மாவட்ட செயலாளர் கே.பி.கந்தனின் ஆதரவாளர்களுக்கும், கே.பி. கந்தனுக்கும் இந்த மும்முனைப்போட்டி, புது திருப்பத்தைக் கொடுத்துள்ளது.
-பிரீத்தி -எஸ்.