
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பேடு பகுதியைச் சேர்ந்தவன் ரூபேஷ் (14). அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், மாணவன் ரூபேஷ், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது தெருவிளக்கு மின் கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவு ரூபேஷ் மீது பாய்ந்தது. நொடியில் தூக்கி வீசப்பட்ட ரூபேஷ், அதே இடத்தில் மயங்கி விழுந்தான். அருகில் இருந்தவர்கள் 108 அவசர ஊர்தி மூலம், ரூபேஷை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவன் இறந்த தகவல் அறிந்ததும் அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவன் உடலை, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விட்டு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் ரூபேஷ் இறந்து போன தகவலால் பொதுமக்களும் உறவினர்களும் கடும் கோபமடைந்தனர்.

மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாக அலட்சியம் காரணமாகவே மாணவன் ரூபேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர். சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாணவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொன்னேரி-திருவொற்றியூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார், சம்பவம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.
P.K.M.
