மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் அதிகாரம்|

உலக மாற்றுத்திறனாளிகள் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் அதிகாரமளிப்பு குறித்து, திமுக இணையதள ஆலோசகரும், மேனாள் மூத்த பத்திரிகையாளருமான கோவி.லெனின் எழுதியுள்ள கட்டுரை:

ஐ.நா.மன்றம் அறிவித்தபடி டிசம்பர் 3ஆம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் ( United Nations’ International Day of Persons with Disabilities) நாளாகக் கடைப் பிடிக்கப்படுகிறது. தமிழில் மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் கடைப்பிடிக்கச் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். மாற்றுத் திறனாளிகளுக்கான நலவாரியத்தை உருவாக்கியதுடன், அவர்களுக்கெனத் தனித் துறையை உருவாக்கி, அதை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கச் செய்தவர் முதல்வர் கலைஞர்.

அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க உதவி எனப் பல உரிமைகளை நிலைநாட்டிய கலைஞர் அரசு, மாற்றுத்திறனாளிகள் உரிமை நாளான டிசம்பர் 3 அன்று அரசுப்பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்புத் தற்செயல் விடுப்பு எடுப்பதற்கும் அனுமதித்து, அந்த நாளில் அவர்களின் உரிமை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்தும் வாய்ப்பை உருவாக்கித் தந்தார்.

உலக மாற்றுத் திறனாளிகள் உரிமை நாள் கடைப்பிடிக்கும் தினத்தையே பெயராகக்கொண்டு, டிசம்பர் 3 என்ற அமைப்பை நிறுவி, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பாடுபடும் அன்புத் தோழர் முனைவர் தீபக் மேற்கொண்ட முன்னெடுப்புகளை தி.மு.க. கவனித்து வந்தது.

2021ல் திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரைப் போலவே மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை செலுத்தினார். மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக அவையில் பேசிய முதல் உரையிலேயே, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

2025 ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் இதற்கான சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி, மாநகராட்சி முதல் ஊராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு நியமனப் பதவி உறுதி செய்யப்பட்டது.

ஏறத்தாழ 4500 மாற்றுத்திறனாளிகள் தற்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் வரை உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் 9000 பேர் நியமிக்கப்படவிருக்கிறார்கள்.

தங்களுடைய உரிமைக்கானக் குரலை தாங்களே உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் மகத்தான சாதனையை நிறைவேற்றியிருக்கிறது மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

உள்ளாட்சிகளில் அதிகாரமளித்தல், விருதுகள் வழங்குதல், வாழ்வாதாரப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று உலக மாற்றுத் திறனாளிகள் உரிமை நாளில் பெரும் விழாவாக மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அன்புத் தம்பி கவிஞர் ஜோதிபாசு தொகுத்து வழங்க, திரைக்கலைஞர் ரோகிணி வாழ்த்துரைக்க, மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் வரவேற்புரையாற்ற, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் என அரங்கம் நிறைந்திருந்தது.

திராவிட மாடல் என்பது எல்லாருக்குமான உரிமைகளை நிலைநாட்டும் ஆட்சியாகும். மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் அதிகாரமளிப்பதன் மூலம் சமூகத்தில் புதிய மாற்றத்திற்கான விதை ஊன்றப்பட்டுள்ளது.| இவ்வாறு கோவி.லெனின் எழுதியுள்ளார்.

கட்டுரையாளர் கோவி.லெனின் (படம்)

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *