தொழிலாளி இறப்பில் மர்மம் ! உடலை தோண்டியெடுத்து விசாரிக்கிறது போலீஸ்…

இறந்துபோன கதிர்வேல் மனைவி முத்து

புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் தனியார் பள்ளியின் கட்டிட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி இறந்து போன விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ‘கணவரின் இறப்பில் மர்மம் உள்ளதால் அவர் உடலை தோண்டியெடுத்து மறு விசாரணை நடத்தக்கோரி மனைவி புகார் அளித்துள்ளார்.

சென்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையையொட்டி மாம்பாக்கம் பிரிவு, காயாறு பகுதியில் புதிதாக உருவாகி வருகிறது விஐஎஸ் பள்ளி. இந்தப் பள்ளியில் முக்கியமான சில கட்டிடப் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. கட்டிடப் பணியை முடித்துக் கொடுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழிலாளிகள் வந்து வேலை செய்கின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர், தினக்கூலி அடிப்படையில் இங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18- ஆம் தேதி பள்ளியில் இருந்து கதிர்வேல் மனைவி முத்துவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ‘உங்கள் கணவர் கதிர்வேல் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார்’ என்று அப்போது தெரிவித்துள்ளனர். செல்போனில் தெரிவிக்கப்பட்ட தகவலால் பதறிப்போன கதிர்வேல் மனைவி முத்து, உறவினர்களுடன் பள்ளி கட்டிட கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்கு விரைந்துள்ளனர். அப்போது அங்கிருந்த பள்ளி நிர்வாகமும் காயார் காவல் நிலைய மப்டி போலீசாரும், “இறந்து போன கதிர்வேல் உடலை உடனடியாக எடுத்துச் செல்லுங்கள்” என அவசரப்படுத்தி உடலை மூட்டையாக கட்டி அவருடைய மனைவி, முத்துவிடம் கொடுத்துள்ளனர். உடலை பெற்றுக் கொண்டு சொந்த ஊரான திருவண்ணாமலை சென்ற உறவினர்கள், உடலை கழுவுவதற்காக பார்த்த போது உடம்பில் ஒரு சில பகுதிகள் எரிந்த நிலையில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். உடலை அடக்கம் செய்து விட்டு நேற்று காலை (24.05.2022) சென்னை வந்ததும், இலவச சட்ட உதவிக்கான வழக்கறிஞர்கள் ஏ.க்ராந்தி ப்ரித்விராஜ் மற்றும் எம்.மெர்லின் துணையுடன் காயார் காவல்நிலையம் சென்றனர். அங்கே கதிர்வேலு மனைவி முத்து, தன் கணவர் கொலை செய்யப் பட்டுள்ளார், உரிய நீதி விசாரணை வேண்டும் என்று புகார் அளித்தார். இதனையடுத்து கதிர்வேலுவின் மரணத்தை சந்தேக மரணம் என காயாறு போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். இன்று நண்பகலில் காவல்துறை, ஆர்டிஒ முன்னிலையில் சடலத்தை குழியில் இருந்து வெளியில் எடுத்து உடற் கூராய்வுக்கு அனுப்பப் போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீக்காயத்துடன் இருந்த உடலை மாம்பாக்கம் டூ திருவண்ணாமலை க்கு கொண்டு போக முடிந்தது எப்படி? தீக்காயத்துடன் இறந்தவருக்கு ஹார்ட் அட்டாக் இறப்பு சான்று பெறப்பட்டதா அல்லது விபத்தால் இறப்பு சான்று பெறப்பட்டதா ? திருவண்ணாமலை இடுகாட்டில் எந்த கேள்வியும் கேட்காமல் கதிர்வேலு உடலை அடக்கம் செய்தது எப்படி? யார் அடக்கம் செய்தது ? விபத்துக்குப் பின்னே, சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு போலீசார் நேரில் சென்று பார்வையிட்டார்களா? ஹார்ட் அட்டாக்கில் இறந்தவர் உடலில் தீக்காயம் இருந்தது எப்படி? கேட்கத்தான் எத்தனை கேள்விகள்… உடற்கூராய்வுக்குப் பின்னே நடப்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்…. பிரீத்தி எஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *