தமிழ்நாடு அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து நடத்துகிற வேலைவாய்ப்பு முகாமுக்கு பரவலாகவே வரவேற்பு சிறப்பாக இருக்கிறது எனலாம்.
அந்தந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தொகுதி எம்.எல்.ஏ., ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர், அமைச்சர்கள் நெறிமுறைப் படுத்தி முகாம்களை நடத்துகிறார்கள்.
எங்கெங்கு வேலைக்கு ஆட்கள் தேவையுள்ளதோ அந்த நிறுவனங்களை அணுகி, முகாமில் பங்கேற்க வைக்கின்றனர். முகாமில் நிறுவனங்களால் தேர்வு செய்யப்படுகிற நபர்களுக்கு அதே முகாமில் பணி நியமன ஆணையும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் திருவொற்றியூர் தொகுதி, திமுக எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் ஏற்பாட்டில் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியின் 99-ஆம் பிறந்தநாள் நினைவாக நடத்தப்பட்ட இம்முகாமில் தொழிலாளர் திறன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று தகுதி அடிப்படையில் தேர்வாகியவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி, தொழிலாளர் திறன் ஆணையர் வீரராகவராவ், மாவட்ட திமுக பொறுப்பாளர் மாதவரம் இ.சுதர்சனம் எம்எல்ஏ, திமுக எம்.பி.க்களான டாக்டர் வீ.கலாநிதி, வழக்கறிஞர் இரா. கிரிராஜன் உள்ளிட்டோர் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர்.
எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக முகாமை திருவொற்றியூர் எம்எல்ஏ, கே.பி.சங்கர் செய்திருந்ததை காணமுடிந்தது. பல மாற்றுத்திறனாளிகளை உதவியாளர்களின் துணையுடன் வாகனங்களில் அழைத்து வந்து முகாமில் பங்கேற்க வைத்தது சிறப்பு. தொலைதூர வாசிகளும், வாகன வசதி உடனுக்குடன் கிடைக்காதவர்களும் முன்னரே திட்டமிட்டபடி உதவியாளர்களால் முகாமுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். பங்கேற்றோர் அனைவருக்கும் தேநீர், காலை சிற்றுண்டி, மதியம் வெஜ் மற்றும் நான்வெஜ் பிரியாணி என திருமண வீடுபோல் வேலைவாய்ப்பு முகாமை மாற்றியிருந்தார் எம்எல்ஏ, கே.பி.சங்கர்.
பத்தாயிரத்து அறுநூற்று நாற்பத்தி மூன்று (10,643) பேர் முகாமில் பங்கேற்றனர். ஆண்கள் :5924, பெண்கள் :4719, மாற்றுத்திறனாளிகள் 51- எண்ணிக்கையில் பங்கேற்றனர். தகுதியின் அடிப்படையில் முகாமிலேயே தனியார் நிறுவனங்களால் 1249 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணி நியமன ஆணை பெற்றவர்களில் மாற்றுத்திறனாளிகள் 17 நபர்களும் அடங்குவர். 743 நபர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்குவதாக நிகழ்வின் போது உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
முகாமில் உச்சக்கட்ட நெகிழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் 25 நபர்களுக்கு எம்எல்ஏ கே.பி.சங்கர், நிதியுதவி அளித்து வாழ்த்தினார். ‘முன்னரே நான் அளித்த வாக்குறுதிதான் அது, இப்போது சொன்னபடி செய்துள்ளேன் அவ்வளவுதான் ‘ என்கிறார் கே.பி.சங்கர்! தொகுப்பு : ந.பா.சேதுராமன்