ஆரணி ஆறுதான் பொன்னேரி நகராட்சிக்கு குப்பைத்தொட்டி…

பாதாள சாக்கடை திட்டத்திற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் ஆரணி ஆற்றின் கரையை சேதப்படுத்தி கழிவுநீர் கால்வாய் புதைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 74 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான பணிகள் கடந்த
2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளில் அதாவது 2016 -ஆம் ஆண்டுக்குள் இதன் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள்
10 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்காக பொன்னேரியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆரணி ஆற்றின் கரையோரம் லட்சுமிபுரம் வரை கழிவு நீர் கொண்டு செல்வதற்கான
இரும்புக் குழாயை பூமியில் புதைக்கும் பணியானது; அப்பகுதி விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தப்பட்டது. மேலும் லட்சுமிபுரம் அணைக்கட்டு அமைந்துள்ள இடத்தில், ஆரணி ஆற்றின் கரையை ஜேசிபி இயந்திரம் மூலம் சேதப்படுத்தி நேரடியாக குழாய் மூலம் கழிவு நீரை கொண்டு சென்று ஆற்றில் விடுவதற்காக ராட்சத தொட்டி ஒன்றும் ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது.

ராட்சதக்கழிவு நீர் தொட்டியின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக்கம்பிகள், அதன் சிமெண்ட் கலவைகள், உதிர்ந்துபோய் வெளியே துருத்திக் கொண்டு நிற்கிறது.

தரமற்ற முறையில் ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள இந்த கழிவு நீர் தொட்டியானது, வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, எளிதாக ஆற்றில் அடித்துச் செல்லும் வகையில்; பலவீனமாக காணப்படுகிறது.

ஏற்கனவே பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளின் வேளாண் பாசன நீர் ஆதாரமாக விளங்கும் ஆரணி ஆற்றில் ஆற்றில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, ஆற்றின் பரப்பளவு குறைந்து வருவதாக மக்கள் கொதித்துக் கிடக்கின்றனர்.

தண்ணீருக்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களிடம் தமிழகம் கையேந்தி நிற்கும் நிலையில்; மழைக் காலங்களில் ஆரணி கொசத்தலை ஆறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது; மழையின் அளவைப் பொறுத்து;
12 டி.எம்.சி. முதல் 20 டி.எம்.சி. தண்ணீர் வரை வீணாக வங்கக் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில்; 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பனையும், 100 அடிக்கு ஒரு
‘போர்வெல்’ லும் அமைத்து; நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என; பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. அதை செயல்படுத்தாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும், இந்நிலையில் கழிவு நீரையும், ஆற்றில் கலக்க விட்டால், மற்றொரு கூவமாக ஆரணி ஆறு மாறும் ஆபத்து உள்ளதாகவும்; வேதனை தெரிவித்துள்ளனர் பொதுமக்கள்.

வடகிழக்கு பருவ மழை நெருங்கி வரும் நிலையில், சுமார் 300 அடி நீளத்திற்கு சேதப்படுத்தப்பட்ட, ஆரணி ஆற்றின் கரையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும்; அலட்சியம் காட்டி வருவதாக குற்றஞ் சாட்டி உள்ளனர்.

P.K.M.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *