கந்துவட்டி கொடுமை நாளுக்குநாள் அதிகமாகி வருவதோடு, கந்துவட்டி கும்பலின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலைகளும், கொலைகளும், மர்மச்சாவுகளும் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டு நெசவுத்தொழிலாளி மாணிக்கம், மனைவி ராணியுடன் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சாலைமின்னல் ஏரிக்கரையில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மகள் திருமணம், மகன் கல்வி என்று பல காரணங்களை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் எட்டு லட்சரூபாய், மாணிக்கம் கடன் பெற்றிருந்தார் என்று கூறப்படுகிறது. பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து வட்டியையும் அசலையும் கேட்டு ஒரு கும்பல் மாணிக்கம் – ராணியை தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு காரில் வந்த ஒரு கும்பல், மாணிக்கத்தையும் ராணியையும் காரில், கடத்திச் சென்றதாக தெரிகிறது.
பெற்றோர் காரில் கடத்திச் செல்லப்பட்டது குறித்து, பிள்ளைகள் சசிகலா மற்றும் பெருமாள் போலீசில் புகார் செய்ததோடு பெற்றோரின் செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளனர். போலீசார் செல்போன் டவரை கண்காணித்த போது அது சோளிங்கர் வரை டவரை காட்டி விட்டு பின்னர் அமைதிக்குப் போயிருக்கிறது. இதற்கிடையே அரக்கோணம் சாலைமின்னல் ஏரிக்கரை பகுதியில் ஆடை இல்லாமல் ஆண் – பெண் சடலம் கிடந்ததைப் பார்த்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி விட்டு விசாரணை நடத்தியதில், காஞ்சிபுரத்தில் காரில் கடத்தப்பட்ட. தம்பதியர் மாணிக்கம் – ராணி என்று தெரிய வந்தது. காஞ்சிபுரம் போலீசாருக்கு ராணிப்பேட்டை மாவட்ட போலீசார் இது குறித்து தகவல் கொடுத்தனர். காரில் கடத்திச் செல்லப்பட்ட பெற்றோர் சடலமாய் நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட தகவலை கேட்டதும் அதிர்ச்சியடைந்த பிள்ளைகள் பெருமாளும் சசிகலாவும் எலிவிஷத்தை சாப்பிட்டு விட்டனர். போலீசார் உயிருக்குப் போராடிய இருவரையும் மீட்டு
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். வேலூர் சரக போலீஸ் டிஐஜி ஆனிவிஜயா, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் எஸ்.பி. தீபா சத்யன் ஆகியோர் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த பின் கொலையாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தனர். காஞ்சிபுரத்தில் கடத்தலில் தொடங்கி ராணிப்பேட்டையில் இரட்டைக் கொலை என்றளவில் நின்று பின்னர், இரண்டு பேர் தற்கொலை முயற்சி வரை போயுள்ளது கந்துவட்டி கொடூரன்களின் கொட்டம். தலைநகர் சென்னையிலும் இதற்கு இணையான ஒரு கந்துவட்டி கொடூரம் நடந்துள்ளது.
சென்னை பெரம்பூர் புளியந்தோப்பு பகுதியில் வசித்தவர் சித்ரா. பெருந்தொற்று கொரோனா பலரை முடக்கிப் போட்டது போல் சித்ரா குடும்பத்தையும் முடக்கவே குடும்பத் தேவைக்கு கடன் வாங்க ஆரம்பித்துள்ளார். சிறுகச் சிறுக அப்படி ரங்கநாயகி என்ற பெண்ணிடம் வாங்கிய கடன் ஐந்து லட்சரூபாயை தொட்டுள்ளது. சித்ராவால் கடனையும் திருப்ப முடிய வில்லை, வட்டியையும் செலுத்த முடியவில்லை. “வட்டியும் அசலும் சேர்ந்து 35 லட்சம் ஆச்சு, முடிந்தால் பணத்தைக்கொடு, இல்லையென்றால் வீட்டை என் பெயருக்கு கிரையம் பண்ணிக்கொடு” என்று ரங்கநாயகி தரப்பு கெடு விதித்துள்ளது. ரங்கநாயகியும் அவரது கணவர் சேகரும், மகனும், இன்னும் சிலருமாக சேர்ந்து சித்ராவை மிரட்டியதாக தெரிகிறது. சித்ராவின் இரண்டு மகள்களையும் சேர்த்தே மிரட்டியிருக்கிறது ரங்கநாயகி குடும்பம். அவமானம் தாங்க முடியாமல், கடந்த 7ஆம் தேதி சித்ரா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அதிகளவு தீக்காயத்துடன் சித்ரா, அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சாதாரணமாக வாசித்து விட்டு கடந்து போய் விடக்கூடிய செய்தி அல்ல இது. கந்து வட்டி கொடுமைகளில் ஈடுபடும் நபர்கள் ஸ்பீடு வட்டி, எக்ஸ்பிரஸ் வட்டி, மீட்டர் வட்டி, ஜெட் வட்டி என்று பல பெயர்களை இந்த கொடூரத்துக்கு வைத்துள்ளனர். சில அரசுப் பணியிடங்களில் அசலையும் தரமுடியாமல் வட்டிப் பணத்தையும் கொடுக்க முடியாமல் தவிக்கும் நபர்களை தினமும் பார்க்க முடிகிறது… தமிழ்நாடு அரசு நடைமுறையில் இருக்கும் கந்து வட்டி ஒழிப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப் படுத்த வேண்டிய அவசியமான காலகட்டம் இது! ந.பா.சேதுராமன்