அன்று வந்ததும் இதே நிலா…
இன்று வந்ததும் அதே நிலா ! என்ற பாடலை முணுமுணுத்தபடி நம் முன்னே வந்தமர்ந்தார் க்ரைம் ஏரியாவின் மூத்த செய்தியாளர் திரு. இந்திரகாந்த் ! ‘சொல்லுங்கண்ணே விஷேச தகவல் கொண்டாட்டமா?’ என்றதும் அவர் சொல்லி விட்டுப் போனதுதான் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது!
இன்றைய மக்கள் முதல்வர், அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, முதல்வரான எடப்பாடியைகூட அப்படி வம்புக்கிழுத்ததில்லை. ஆனால் அன்றைய தலைமை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரனை, தூங்கவிடாமல், நாளொரு அறிக்கையின் மூலம் அவரை அலறவிட்டிருக்கிறார்.
“குட்கா மாமூலில் பங்காளி, வாக்கி டாக்கி ஊழலின் ஊற்றுக்கண்” என்று அவரை வசை பாடினார். தலைமை டி.ஜி.பி.யும் தவிப்புடன் ப்ரஸ்சுக்கு தன்னிலை விளக்கம் கொடுத்தும், அறிக்கைகள் விடுத்தும் அல்லாடிப் போய் விட்டார். “குறிஞ்சி மலரே! ஏனிந்த கொலை வெறி டி.கே.ராஜேந்திரன் மீது மட்டும் என்பது” சிதம்பர ரகசியமாக இருந்தது சீனியர் நிருபர்களுக்கு…
இன்று யார் தோள் மீதும் அமர்ந்து சவாரி செய்ய அவசியமே இல்லாத அளவுக்கு தனிப்பெரும்பான்மையோடு அரியணையில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அமர்ந்து விட்டார். 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. செய்து முடிக்காத சாதனைகளை ஒரே வருடத்தில் தி.மு.க.வின் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்.
கடந்த காலத்தில் “பெரும்பான்மையை நிரூபி” என்று எடப்பாடி பழனிச்சாமியை கேட்டதற்கு, சட்டையை கிழித்து இவரை சாலையில் வீசியெறிந்திருக்கிறார்கள்.
ஆனால் இன்று யாரும் அசைத்துப் பார்க்கவே முடியாத அசுர பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார் ஸ்டாலின்.
“நாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அடுத்த நொடியே அ.தி.மு.க.வின் ஊழல் மந்திரிகள் ஒவ்வொருவராக புழலுக்கு பயணம் மேற்கொள்ள நேரிடும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.வின் மரணம் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பேன். குட்கா கமிஷன் வாங்கிய உயர் போலீஸ் அதிகாரிகளின் முகமூடியை கிழிப்பேன்” என்று தொடர்ந்து பல வாக்குறுதிகளையும் ஸ்டாலின் அள்ளி வீசினார்.
மக்கள் நலன் தொடர்பான பல்வேறு வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றி விட்டார். ஆனால் முன்னாள் ஊழல் அமைச்சர்களின் கைது நடவடிக்கை வலுவிழந்து விட்டது. தர்மயுத்தம் செய்து, துணை முதல்வர் பதவியை, மோடியின் தாள் பணிந்து பெற்றுக்கொண்ட பன்னீரின் மீது பதியப்பெற்ற சொத்துக்குவிப்பு வழக்கு வருடக்கணக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையில் விழுந்து கிடக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதே பதியப்பட்ட வழக்கு அது. வழக்கை கிடப்பில் போட்டு பன்னீரை காப்பாற்றிய அந்த விஜிலென்சின் உயரதிகாரியே, பெண் சபலத்தில் சிக்கி, சந்தி சிரித்தபோது, கைமாறாக அவரை கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றியிருக்கிறார் பன்னீர்செல்வம்.
இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிகாரம் அத்தனையும் கைக்கு வந்தபோதும், குறிஞ்சி மலரின் கொலைவெறி எப்படி தணிந்து போனது? முன்னாள் தலைமை டி.ஜி.பி.யை ஏன் விட்டு வைத்திருக்கிறார்? வாக்கி டாக்கி ஊழலும், குட்கா கமிஷன் குற்றச்சாட்டுகளும் எப்படி வலுவிழந்து போனது? ஜெ.வின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை ஏன் இன்னமும் வழுக்கிக் கொண்டே போகிறது?
இதுபற்றி அன்று மேடைகளில் வாய் வறண்டு போகும் அளவுக்கு வாரியிறைத்த குற்றச்சாட்டுகள், இன்று வழித்தடம் தெரியாமல் போனது ஏன் என்பதே மவுனம் காக்கும் முதல்வர் மீது சமூக ஆர்வலர்கள் குத்தும் கருப்பு முத்திரை!
சூத்திரதாரிகளை சுட்டெரிப்பேன் என்ற சூரியனின் சபதம் என்னாச்சு? பெட்டி பரிவர்த்தனை மூலம் சமரசம் ஆகிவிட்டதா? என்றெல்லாம் வலைதளங்களில் வதந்திகள் வேகம் பிடிக்கிறது. முதல்வர் இன்னமும் மேற்கண்ட நடவடிக்கைகளில் மவுனம் சாதித்தால், “மவுனம் சம்மதம்” என்றாகிவிடும். தவறு செய்கிறவர்கள் உயர்பதவியிலோ உயர்மட்ட செல்வாக்கு தொடர்பிலோ இருப்போர் என்றால் அவர்கள் மீதான ஊழல், புகார், விசாரணை அத்தனையும் அடிபட்டுப் போய்விடும் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களைத்தான் வரலாறு எடுத்துக் காட்டாய் கையிலெடுத்து வைத்துக் கொள்ளும்!
மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, எழுதுகோலையே மூலதனமாகக் கொண்ட நேர்மையான பத்திரிகையாளர்கள் இதை மறக்கமாட்டார்கள். அவர்களது நினைவுக் கூர்மை, காலத்தை வென்று நிற்கும். “கேள்வியின் நாயகனே இந்த கேள்விகளுக்கு விடை உள்ளதா உங்களிடம்?” என்கிறார்கள் சில சீனியர் நிருபர்கள்… இவ்வளவுதான் சொன்னார் திரு. இந்திரகாந்த்