சென்னை மணலி புதுநகரில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு (ம) கொசஸ்தலை ஆற்றின் கரைப் பகுதிகளை பலப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேரில் ஆய்வு செய்ததோடு, பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை மணலி புதுநகரில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது மணலி புதுநகர்ப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் கூட. அதேபோல் கொசஸ்தலை ஆற்றின் கரைகளை பலப்படுத்தி பெருமழை – பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இந்த இரண்டு பணிகளுக்கும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியிருந்தது பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்நிலையில் தான், பணிகள் நடக்கும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். முதலமைச்சரோடு மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோரும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதலமைச்சர் ஆய்வு மேற் கொள்ள வந்த போது அவரிடம் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
– தேனீஸ்வரன் –