
கஞ்சா போதையில் இளைஞர்கள் இருவரை கொலை செய்து புதைத்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன், ஆகாஷ். இவர்கள் இருவரும் கடந்த வாரம் திடீரென மாயமாகி விட்டனர். இருவரையும் பல்வேறு இடங்களில் தேடிய அவர்களது உறவினர்கள், இதுகுறித்து 17ஆம் தேதி பென்னாலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் நண்பர்கள் காமேஷ், மணி ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜானகிராமன், ஆகாஷ் ஆகிய இருவரையும் கடந்த 18 ஆம் தேதி காமேஷ், மணி, மற்றும் நல்லபாண்டி (நீதிமன்றத்தில் சரண்) ஆகியோர் ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுவலக மைதானத்துக்கு அழைத்துச் சென்று கஞ்சா புகைத்துள்ளனர். கஞ்சா புகைத்தலின்போது ஏற்பட்ட தகராறில் முன்று பேரும் சேர்ந்து ஆகாஷ் மற்றும் ஜானகிராமனை கொலை செய்து இருவரின் சடலத்தையும் புதைத்தது தெரியவந்தது. இந்நிலையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை அங்கிருந்து காவல்துறையினர் பலவந்தமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே புதைக்கப்பட்ட இருவரின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு வட்டாட்சியர் ராஜேஷ்குமார் முன்னிலையில் மருத்துவக்குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதன்பின் இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரித்த பின்னரே, கொலைக்கான காரணம்” தெரியவரும் என தெரிவித்தார்.
P.K.M.
