நண்பனுக்கு ஓர் கடிதாஞ்சலி…

சிவனோடு கலந்த பரமசிவத்திற்கு நட்பின் மடல். அன்புள்ள எனது ஆருயிர் நண்பன் கவிஞர் ஆர். பரமசிவத்திற்கு பொன்.கோ.முத்து எழுதும் நட்பின் கடிதம்.

நண்பா நாம் இருவரும் நட்பு கொண்ட நாள் முதலாக நான் துன்பப்படும் போதெல்லாம் எனக்கு நண்பனாக மட்டுமின்றி தாயாக சகோதரனாக ஆசனாக இருந்து எனக்கு ஆறுதல் கூறி இருக்கிறாய். என் தந்தை இறந்த போதும், என் மூத்த சகோதரன் இறந்த போதும், அண்மையில் என் தாய் என்னை விட்டு விண்ணுலகம் சென்ற போதும், நான் பட்ட துயரத்தில் இருந்து ஆறுதல் கூறி என்னை தேற்றியவன் நீ !

நண்பா உனக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன் ஒருமுறை உன்னை பார்ப்பதற்காக உன் வீட்டிற்கு நான் வந்தபோது, நான் படும் துயரங்களையும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் உன்னிடம் பகிர்ந்து கொண்ட போது, “யோவ் புலவரே என்னயா வாழ்க்கை இது, சீக்கிரம் போய் சேர்ந்தா நல்லதுன்னு தோணுதியா எனக்கு… என நான் கூறியதும், நீயோ, “முத்து வருத்தப் படாதய்யா, கடவுள் இருக்கான்யா, நாம யாருக்கும் எந்த துரோகமும் செய்யல முடிந்த அளவுக்கு மத்தவங்களுக்கு நல்லது தான் செஞ்சிருக்கோம்… நம்ம ஊழ்வினை கர்மாதான் நம்மை பின் தொடர்ந்து வந்து வாட்டியெடுக்குது; அதனாலதான்யா நம்மளால பலனடைஞ்சவன் கூட நம்மைப் பாத்து எகத்தாலமா பேசுறான், அதுக்கெல்லாம் நீ கவலைப்படாதே முத்து” என என்னை நீ தேற்றியது மட்டுமல்ல, பிரதிபலன் பார்க்காமல் நீ நட்பு பாராட்டியதும், ஜெயக்குமார் டைலர் கடையில் தலைவர் சாமிநாதன், ரவி, சுரேஷ் சார், ஜெயக்குமார் என நாமல்லாம் சிரிச்சு பேசி மகிழ்ந்த அந்த நாட்கள்.. நமக்குள் ஏற்படும் விவாதத்தினால் அவ்வப் போது ஏற்படும் சிறு சண்டை சச்சரவு – மறக்க முடியுமா ? நான் உடல் நலம் குன்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது நீ, தலைவர் சாமிநாதன், தம்பி பார்த்தசாரதி, ரவி எல்லாம் உங்க குடும்பத்துல ஒருத்தனா நினைச்சு எனக்காக செஞ்சு உதவிய மறக்க முடியுமா?

பரமசிவம் தன்னுடைய தேவைக்காக என்கிட்ட வந்து நின்னவன நான் பார்த்து இருக்கேன், ஆனா நீ எனக்கு சேவை செய்ய வந்தவன்… நீ எங்களோடு இருந்த போது மணிக் கணக்கா பல விஷயங்களை நாம பேசி இருக்கோம்… ஆனா நீ இப்போ எங்க கூட இல்ல பரமசிவம்! இனிமே எனக்கு மன கஷ்டம் வந்தா யார்கிட்ட போய் என் வேதனைய கொட்டுவேன்… நீ இருந்த வரைக்கும் துடுப்பாய் இருந்து என்னை கரை சேர்த்த… இனிமே துடுப்பில்லா படகு மாதிரி துன்ப அலை அடிக்கிற திசையெல்லாம் போகணும் என்பதை நெனச்சா தான் பரமசிவம் எனக்கு பயமா இருக்கு… அதனால தான்டா பரமசிவம், சிவனோட சேர்ந்த உனக்கு இந்த நட்பின் கடிதம் ! என்னென்னவோ எழுதணும்னு நினைச்சேன்… எழுத முடியல! மறுபிறவி என்று ஒன்று இருந்தால் மறுபடியும் நாம் அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம் என்று, நான் சொல்ல மாட்டேன் ஏன் தெரியுமா… பரமசிவம் நீ அந்த பரம்பொருள் சிவபெருமானோடு சேர்ந்துட்ட… அதனால உனக்கு மறுபிறவி கிடையாது, பரமசிவம் மறுபடியும் எனக்கு ஒரு உதவி செய்யறியா, எங்க அம்மாவும் சிவனோடதான்டா இருப்பாங்க; நான் அங்கு வரவரைக்கும் எங்க அம்மாவ என் இடத்தில் இருந்து நீ தான்டா பரமசிவம் பாத்துக்கணும்… புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி…

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *