குளிர் சாதன வசதி இல்லாத ஆம்புலன்ஸ் !அழுகிய மாணவி உடல்…

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் நிக்ஸன் -கிருஷ்ணமாலா தம்பதியர். அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இவர்களின் மகள் பெமினா (15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். குடும்பத்தோடு கடந்த 14 -ஆம் தேதி, இவர்கள் தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவிக்கு சுற்றுலா சென்றனர். அருவியில் குளித்துவிட்டு நடந்து வரும் பொழுது அங்கிருந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து பெமினா மீது விழவே நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பெமினா உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நிகழ்விடம் வந்த போலீசார், பெமீனா உடலை உடற்கூராய்வுக்காக, கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூராய்வு முடிந்து மறுநாள் மாணவி பெமீனாவின் உடல் அரசு ஆம்புலன்சில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை க்கும், பின்னர் மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கும், அங்கிருந்து இன்னொரு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரத்திற்கும், பின்னர் விழுப்புரம் டூ சென்னைக்கு மற்றொரு அவசர ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான சென்னைக்கும் கொண்டு வருவதற்குள் மாணவி பெமினாவின் உடல், மரணம் தந்த சோகத்தை விட கொடுமையாக குடும்பத்தாருக்கு மாறிப்போனது. அவசர ஆம்புலன்சுகளில் குளிர்சாதன வசதி இல்லாததால் மாணவியின் உடல் சென்னை வந்து சேர்வதற்குள் அழுகி போய்விட்டது. இந்நிலையில்தான் நேற்று (18.05.2023) மாணவி பெமீனா உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நம்மிடம் பேசிய மாணவி பெமீனாவின் உறவினர்கள், “தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுருளி அருவியின் வனப்பகுதியில் ஏராளமான காய்ந்த மரங்கள் இருக்கிறது, சீஸன் காலத்தை கருத்தில் கொண்டு வனத்துறையினர் இவைகளை அப்புறப்படுத்தியிருந்தால் மாணவியின் உயிரிழப்பு தவிர்க்கப் பட்டு இருக்கலாம். அவர் தலையில் மரம் விழுந்திருக்காது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வனத்துறையின் நிர்வாகச் சீர்கேட்டால் நிகழ்ந்து விட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அவசர ஆம்புலன்சுகள், மார்ச்சுவரி ஆம்புலன்சுகள் இல்லாததால் பெமீனா உடல் பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பல ஆம்புலன்ஸ்களில் மாற்றி மாற்றி ஏற்றப்பட்டு சென்னை கொண்டு வருவதற்குள் அழுகி விட்டது. இனியாவது மருத்துவமனைக்கான அவசர ஆம்புலன்சுகளில் குளிர்சாதன வசதியை முறைப்படுத்த வேண்டும்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

பொன். கோ. முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *