விவசாயநிலங்கள் உள்ள பகுதியில் இருந்து 300 மீட்டர் தூரத்துக்கு கிரஷர், குவாரிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்கிறது சட்டம். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வேளியநல்லூர் கிராமத்தில் விவசாயநிலங்களின் கரைப்பகுதியை ஒட்டியே குவாரிகள் இயங்குவது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்றுதான் தெரியவில்லை!
குவாரிப்பணிக்காக பாறைக்கற்களை உடைத்து நொறுக்கும் ’கிரஷ்ஷர்’ களால், விவசாயபூமியும், அந்த பூமிக்கு உரமாக இருக்கும் நீர் நிலைகளும் பாழாகிக் கொண்டிருப்பதோடு, விவசாயிகளுக்கு சுவாசக்கோளாறும் பரிசாகக் கிடைத்திருக்கிறது !
எழுபதைக்கடந்த விவசாயி ரத்தினசாமியின் பிள்ளைகள், பெரிய பெரிய படிப்பையெல்லாம் படித்தும் கூட விவசாயத்தை விட்டுவிடாமல், தற்சார்பு முறையில் நாற்பது ஏக்கர் பரப்பில் இங்கு விவசாயம் செய்து வருகிறார்கள். தேக்கு உள்ளிட்ட நாற்பது வகையான மரங்கள், வாத்துகள், முயல்கள், வான்கோழிகள், நாட்டுக்கோழிகள், ஆடுகள்- அவைகள் வாழ வாழைகள் மற்றும் தென்னங்கன்றுகளோடு, நெற்பயிரையும் வைத்துள்ளனர். இயற்கை உரத்தின் உதவியோடு சில ஆண்டுகளாக ஆரோக்கியமாகத்தான் வாழ்ந்து வந்துள்ளது அந்தக் குடும்பம்.
‘என்ன பெரியவரே… பிபி இருக்கு, சுகர் இருக்குன்னு வருவீங்க… இப்ப எதையும் உடம்புல காணோமே?’ என்று உள்ளூர் டாக்டர் விசாரிக்கிற அளவு, இயற்கையோடு ஒன்றிப்போய் விட்ட வாழ்க்கை முறையால், ரத்தினசாமி ஆரோக்கியசாமியாக மாறிப்போய் விட்டிருந்தார். பெரியவர் ரத்தினசாமியின் ஆரோக்கியத்தைப் பார்த்து விட்டு, உள்ளூர் மக்களும் அவரைப்போலவே இயற்கை உரம், தற்சார்பு விவசாயம் என்று மாறத் தொடங்கிய வகையில் டாக்டர்களுக்கு வேலை இல்லாமல் போயிருக்கிறது.
பசுமைப்புரட்சியாய் பளிச்சிட்ட வேளியநல்லூர் கிராமத்தில் இப்போது வெறுமை தலை காட்டத் தொடங்கியிருப்பதற்கு பின்னணியாய் இருப்பது, குவாரிகளும், கிரஷ்ஷர்களும்தான். கல கலவென இளைஞன் போல் துள்ளிக் கொண்டிருந்த பெரியவர் ரத்தினசாமி முகத்தில்தான் இப்போது எத்தனை கவலைரேகைகள்.
ரத்தினசாமியிடமே கேட்டோம் !
கவலையின் காரணத்தை சொன்னார்.
“நான் மட்டுமே இங்க நாப்பது ஏக்கர்ல விவசாயம் பாக்குறன். என்னிய மாதிரி, நிறைய பேரு இருக்காங்க. நெலத்துக்குப் பக்கத்துலயே கெரஷ்ஷரும், குவார்ரியும் போட்டுக்கிட்டு கல்லையும் கட்டியையும் உடைச்சா நெலமும், தண்ணியும் என்னத்துக்கு பிரயோசனப்படும்? மீன் வளர்ப்பு பண்றோம், அதுக்கு ஆகாரம் மண்புழு. குவாரி வந்தபிறகு மண்புழுங்களை தேடித்தேடி நாங்களே தொலைஞ்சுடுவோம் போலருக்கு; கண்ணுக்குப் பட்ட தூரம் வரைக்கும் ஒரு புழு கூட சிக்கல. வாழை இலைங்க பழுத்து கலர் மாறிடுச்சு. வாழை இலைங்கதான் ஆடு, மாடு, கோழிங்களுக்கு ஒரு பகுதி தீவனம்… இப்ப அதுங்க வயித்துக்கும் சோதனை செயற்கையா வந்துடுச்சு.
புள்ளைங்க படிச்ச படிப்புக்கு விவசாய நிலத்த கூறு போட்டு ரியல் எஸ்டேட் தொழில பண்ணாம, விவசாயத்தைக் காப்பாத்துவோம்ன்னு துணிச்சலா இறங்குனத்துக்கு அரசாங்கம்தானே துணையா நிக்கணும்? எங்க புள்ளைங்களோடு, கூடப்படிச்ச புள்ளைங்களும் விவசாயத்துல இறங்கிருக்காங்க… நாளைக்கு மற்ற புள்ளைங்களும் விவசாயத்த நம்பி இறங்குறதுக்கு அரசாங்கம்தானே ஆதரவா நிக்கணும், அப்பத்தானே எங்களை மாதிரி விவசாயிகளுக்கு பாதுகாப்பு?
குவாரில இருந்து வர்ற பாறைதூளுங்கள சாப்பிட்டு ஆடு மாடு கோழிங்கன்னு கால்நடைங்க எல்லாத்துக்கும் வயித்துப்போக்கும், வயித்துல கட்டியுமா வேதனைப் படுதுங்க, இப்ப அதுங்களையும் சாக விட்டுடாம காப்பாத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. கல்குவாரிய மூடச்சொல்லி கிராமசபைக்கூட்டத்துல மொத்த விவசாயிங்களும் கையெழுத்துப் போட்டு மனு கொடுத்தோம், அது அப்படியே கிடப்புல இருக்கு. கலெக்டர் ஜமாபந்தில போயும் இதேபோல மனு கொடுத்தோம், அதுவும் கிடப்புல இருக்கு. எல்லா வகையிலயும் அதிகாரிங்க கவனத்துக்குக் கொண்டு போயிட்டோம், ஒன்னும் நடக்கல. இதுலவேற, இளைஞர்கள் எல்லாரும் விவசாயத்துக்கு வாங்கன்னு அரசாங்கம் கூப்புடுது. வந்து என்ன செய்ய, இப்படித்தான் வேதனையில கிடக்கணும். ஏற்கெனவே விவசாயத்துக்கு ஆள் பற்றாக்குறை வேற. நூறுநாள் வேலை திட்டத்தில பாதிபேரு கிடக்கிறாங்க, கொஞ்ச நஞ்சம் கிடைச்ச விவசாயிகளை வெச்சுக்கிட்டு விவசாயம் பண்ணா, இப்படி ஒரு சோதனை.
அக்ரிகல்ச்சர் ஆபீஸ்ல பனங்கொட்டை விதை கொடுத்தாங்க, வாங்கிட்டு வந்து பாத்தா, ஓடு மட்டும்தான் இருக்குது, உள்ளருக்க விதையக் காணோம்… கோடியில டெண்டர் விட்டு, டெண்டர் எடுத்து மக்களுக்கு நல்லது செய்யணும்னு அரசாங்கம் நினைச்சாலும், கொள்ளையடிச்சு மோசடியா சம்பாதிக்கணும்னு நினைக்கறவங்க இருக்கற வரைக்கும் இங்க எதுவுமே நல்லபடியா நடக்க வாய்ப்பு இல்லே”.
பெரியவர் ரத்தினசாமியைப் போன்றோரின் ஜமாபந்தி குறைதீர் மனுக்கள் மீதும், கிராமசபைக் கூட்டங்களில் முன் வைக்கப்படும் மனுக்கள் மீதும் மாவட்ட நிர்வாகம், தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட அமைச்சர் கருணைப்பார்வை பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். ஏனென்றால், குவாரி, கிரஷ்ஷர்களை விவசாயப் பகுதியிலேயே வைக்கும் அளவுக்கு சக்தி படைத்த முதலாளிகளை ஏழை விவசாயிகளால் ஒரு போதும் எதிர்த்து நிற்கமுடியாது.
மக்கள் சபை, கிராமசபைக் கூட்டங்களை ஆண்டுக்கணக்கில் நடத்தியவர்தான் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் என்பதால் உங்கள் கவலை விரைவில் தீரும் என்று வேளியநல்லூர் விவசாயிகளுக்கு ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு வந்திருக்கிறோம்.
தமிழ்க்குமரன்