சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சரக்கு பெட்டகம் சரக்குந்து மீது சரிந்து விழுந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கடித்து சக ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய பொருட்களையும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சேர்ப்பதற்காகவும் தினமும் நூற்றுக்கணக்கான சரக்குந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் துறைமுக வளாகத்திற்குள் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் சரக்கு பெட்டக முனையத்திற்கு சரக்கு பெட்டகத்தை ஏற்றுவதற்காக சென்ற சரக்குந்து ஒன்றின் மீது, திடீரென அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டகங்கள் திடீரென சரிந்தது. அப்படி சரிந்தில் ஒன்று, நின்று கொண்டிருந்த சரக்குந்து மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் சரக்குந்தின் முன் பகுதி நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி அதன் ஓட்டுனர் நாகராஜ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சக ஓட்டுநர்கள், காமராஜர் துறைமுக நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும், அங்கு பணிநிமித்தம் வந்து செல்லும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், துறைமுக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிரச்சினையை துறைமுக நிர்வாகத்திடம் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த ஓட்டுனரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
PKM