ஐஏஎஸ் தேர்வில் வென்ற அஸ்வினிக்கு பொன்னேரி- சயனாவரம் கிராமத்தினர் பாராட்டுவிழா…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகர் – சசிகலா தம்பதியரின் மகள் அஸ்வினி. பொறியியல் பட்டதாரி. இவர்கள் கல்வி உள்ளிட்ட தேவைக்காக தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். அண்மையில் (2023) வெளியான குடிமைப்பணிகள் தேர்வில் அகில இந்திய அளவில் 229-வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

தங்களது கிராமத்தில் இருந்து முதன் முதலாக குடிமைப் பணிகள் தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெற்றதை கொண்டாடும் வகையில் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., சிறுணியம் பலராமன் தலைமையில் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மாணவி அஸ்வினிக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் கிராம மக்கள் தங்களின் அன்பை வாழ்த்தாக தெரிவித்தனர். கேக் வெட்டியும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பாராட்டு ஏற்புரையில், பேசிய சாதனை மாணவி அஸ்வினி, “பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தேன். ஐஏஎஸ் லட்சியத்திற்காக வேலையை உதறித் தள்ளிவிட்டு தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டும் நான்குமுறை தோல்வியடைந்தேன். விடா முயற்சியின் காரணமாக ஐந்தாவது முறை தேர்வெழுதி அகில இந்திய அளவில் 229- வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தரவரிசைப்படி எனக்கு ஐபிஎஸ் ஒதுக்கீடு கிடைக்கும். மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து நான் பணியாற்றுவேன். குடிமைப் பணிகள் தேர்வு என்பது எளிதானது தான். தொடர் பயிற்சியும், விடா முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். ஓரிரு முறை தோல்வியடைந்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெற்று சாதிக்கலாம்” என்றார் அஸ்வினி.

பொன். கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *