எதிர்வரும் 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பத்திரிகையாளர்
‘விகடகவி’ எஸ்.கந்தசாமி, சென்னை மத்திய சென்னை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ். கந்தசாமி.
‘விகடகவி’ மாத இதழின் ஆசிரியர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக
’விகடகவி’ இதழை நடத்திவரும் கந்தசாமி, பல்வேறு நாளிதழ்கள்,
புலனாய்வு இதழ்களில் பணியாற்றியவர்.
தீவிர ஆர்.டி.ஐ. ஆர்வலரான எஸ்.கந்தசாமி, தன்னுடைய தகவல் அறியும் உரிமை சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு சமூக அவலங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். டிரான்ஸ்போர்ட், மாநகராட்சி, காவல்துறை, தலைமைச் செயலகம் என பல்வேறு நிர்வாகங்களின் தகவல்களை சமூக அக்கறையோடு ஆர்.டி.ஐ.யில் கேட்டுப்பெற்று புதிய அரசாணைகள் வெளியாக காரணமாக இருந்திருக்கிறார்.
ஆதரவற்ற மனித உடல்களை அடக்கம் செய்வது இவரது பிரதான பேஷன் என்றே சொல்லலாம். அந்த வகையில் “விழிகள்” இயக்க நிறுவனர், வழக்கறிஞர் ஆர்.கார்த்திகேயனுடன் இணைந்து முன்னூறுக்கும் மேற்பட்ட சடலங்களை, கந்தசாமியும் அவரது நண்பர்கள் குழுவும் நல்லடக்கம் செய்துள்ளனர்.
பெருந்தொற்று நோயாக கண்டறியப்பட்ட ‘கொரோனா’ காலகட்டத்தில் வீதி வீதியாய் சென்று உணவும் இன்னபிற தேவையுள்ளோர்களை தேடிப்பிடித்து மாதக்கணக்கில் உணவும், குடிநீரும் அவர்களுக்கு வழங்கியதை இப்போது நினைத்துப் பார்க்கத் தோணுகிறது.
மோட்டார் சைக்கிளில் போய் உணவு வழங்கினார். பின்னர் மீன்பாடி ரிக்சாவில் போய் உணவு வழங்கினார். அதன்பின்னர் வேன் ஒன்றை வாடகைக்குப் பிடித்து அதில் போய் உணவு வழங்கினார். அதே வேன், இரண்டு மூன்று என்று எண்ணிக்கையில் அதிகமானது.
மாநிலக்கட்சிகள், தேசியக்கட்சிகள் கூட இப்படி – இதுபோன்ற சூழ்நிலையில் விடாது செயலபட்டிருக்குமா என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது.
மாமன்ற உறுப்பினர், மேயர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளுக்கான தேர்தல்களில் தொடர்ந்து களம் காணும் கந்தசாமி போன்ற தன்னலமற்ற மனிதர்களின் வெற்றிதான், உண்மையான ஜனநாயகத்தின் வெற்றியாக கருதமுடியும்.
எப்போதும்போல இப்போதும் கந்தசாமிக்கு சில ஆயிரம் வாக்குகளை மட்டும் அளித்து ‘ஜனநாயகம்’ காப்பாற்றும் மக்களாகவே – இந்த மக்கள் இருக்கப் போகிறார்களா என்பதை காலம்தான் முடிவு செய்யமுடியும்.
ந.பா.சேதுராமன்