சென்னை புறநகர் தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாம்பரம் அடுத்த சேலையூர் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர், போதைப் பொருள் கஞ்சாவை விற்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைக்கவே அதுகுறித்த விசாரணையில் தீவிரமாக இறங்கினர்.
ஏற்கெனவே, ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0′ என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழ்நாடு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போதை பொருட்களை ஒழிக்க ’ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0′ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களும் கஞ்சா பயன்படுத்துவதாக தகவல் கிடைக்கவே அங்கும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில் வண்டலூர் தனியார் யூனிவர்சிடியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு மாணவரான விஷாலுக்கு போன் செய்தால், அவர் கஞ்சாவை மாணவர்களுக்கு சப்ளை செய்வார் என தகவல் கிடைத்தது. போலீசார், விஷாலை தாம்பரம் அருகே மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரிக்கும் போதே அவரிடம் இரண்டு பொட்டலம் கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. மாணவர்களிடம் கூகுள் பே மூலம் பணம் பெற்றுக் கொண்டு கஞ்சா சப்ளை செய்து வந்த விஷாலுக்கு, தேவைப் படும்போது, கஞ்சாவை மெக்கானிக்கல் என்ஜீனியரிங் மாணவர் பரத்தும், இன்னொரு கல்லூரியில் பி.காம் படிக்கும் அப்துல் அல்தாப் என்ற மாணவரும் கொடுத்து வந்துள்ளனர். தற்போது மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விகடகவி எஸ். கந்தசாமி