தமிழ்நாட்டில் சூரியன் ! டெல்லியில் I.N.D.I.A.

பாஜக இல்லாத மந்திரிசபை, பத்து ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவில் உறுதிப்பட்டு உள்ளது. I.N.D.I.A. கூட்டணி, மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு, நேர்த்தியாக கைகூடியுள்ளது. அதிகாரம் இல்லாத மோடி எப்படி இருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே முடியாதவாறு, மோடியின் சக்தியும் விதவிதமான தோற்றங்களும், பயணங்களும் மட்டுமே, நினைப்புக்கு வந்து போகிறது.

இதனால்தான், “தமிழ்நாட்டில் ரிசல்ட் எப்படியோ தெரியலை. சென்ட்ரல்ல பிஜேபிதான்” என்று போகிற போக்கில் சொல்லிப் போகிற மனநிலையில் பலர் உள்ளனர். நாம் சந்திக்கும் நூறுபேரில் தொண்ணூறு பேர், அப்படியான பதிலைத்தான் தருகின்றனர். கட்டமைக்கப்பட்ட ஒரு மாயையில் தாங்கள் சிக்கியிருப்பதை உணரவும் மறுக்கிற பரிதாப மக்கள் ஏராளம்.

வாழ்வாதாரத்தின் அடிப்படை தேவையான கியாஸ் சிலிண்டர் தொடங்கி பெட்ரோல் – டீசல் என்று ஒவ்வொன்றாய் விலைப்பட்டியலை அடுக்க ஆரம்பித்தால், “அட! ஆமால்ல, பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இப்படி ஆச்சுல்ல” என்று வியப்புடன் நகர்கிறவர்களும் இதே மக்கள்தான். எளிதில் மக்கள், மறதிக்குப் போய் விடுகிறார்கள். திருகுவலி போல தினமும் ஒரு பிரச்சினை புதிதாய் முளைப்பதால், ஏற்கெனவே முளைத்திருந்த பிரச்சினைகள், மக்களுக்கு பிரச்சினையாகவே தெரியாத அளவுக்கு பழகிப்போய் விட்டிருக்கிறது. இப்போதைக்கு மக்களை அரசியல் மயப்படுத்தி தெளிய வைப்பது எளிதல்ல. அதற்கான நேரமும் காலமும் குறைவு. அதே வேளையில் ‘கும்பி’ எரிவுடன் அன்றாடம் செத்துப்பிழைக்கும் மக்கள், பாஜகவை தமிழ்நாட்டில் கரைசேர விட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் நன்கு உணர்ந்துள்ளனர் என்பதையும் – அதே மனநிலை அகில இந்திய அளவிலும் உண்டாகியிருப்பதை இங்கே கவனிக்க வேண்டியுள்ளது.

மத்தியில் பாஜகவுக்கு எதிராக, தேர்தல் முடிவுகள் அமையப் போவதற்கான காரணத்தை அடுக்க ஆரம்பித்தால் இன்னொரு தேர்தலே வந்துவிடும். தமிழ்நாட்டிலும் அதேதான் நிலைமை. மாநில ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி, சில தொகுதிகளை மட்டும், ‘சிங்கிள் டிஜிட்’ டில் இழக்கக்கூடும் என தோணுகிறது. சரியாய்ச் சொன்னால் ஒன்றிரண்டு தொகுதிகள். சௌமியா அன்புமணி (பா.ம.க.) அதில் ஒன்றாக இருக்கக் கூடும்.

தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கேலிக் கூத்தாக்கும் விதமான பாஜகவின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தி வந்த வகையில் திமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி இது. “தற்போது இருக்கும் எம்.பி.க்கள் யாரும் தோற்றுப் போக வாய்ப்பு இல்லை- அப்படியே தொடர்கிறார்கள்” எனலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அதிமுக சோதனையை எதிர்கொண்டு நிற்கும் காலகட்டம் இது. பாஜகவோடு இரண்டற கலந்து விட்டதற்கான பரிசுதான் இது. ‘நான் அவன் இல்லை, இப்போது நாங்கள் பாஜகவோடு இல்லை’ என்று அதிமுக சத்தியம் செய்தாலும் அதை கேட்டுக் கொள்கிற மனநிலையில் மக்கள் இல்லை. காலம் கடந்து விட்டது. அந்தளவுக்கு பாஜகவால் தமிழ்நாட்டு மக்கள் துயரத்தை சந்தித்துள்ளனர். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள், அதன் தலைவர்கள் அனுபவிப்பதை விட அந்த மாநில மக்கள் அனுபவிக்கும் துயரம் அதிகம். அந்த துயரத்துக்கான பின்னணியில் பாஜக இருப்பதை தமிழ்நாட்டில் திமுக தோலுரித்துக் காட்டியது போல பிற மாநில கட்சிகள் எதுவும் இதுவரை செய்யவில்லை. ஒட்டுமொத்த நாட்டின் எதிர்க்கட்சி களுக்குமான வேலையை திமுக மட்டுமே பார்த்துவருகிறது என்றே சொல்லலாம்.

மத்தியில் பாஜக வீழ்ச்சியும் தமிழ்நாட்டில் பாஜகவால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் வீழ்ச்சியும் ஒரே நேரத்தில் எப்படி சாத்தியம் என்ற கேள்வியே தேவையற்றது. வேறு வழியே இல்லை. ஆய்ந்து பார்த்தால் அது சாத்தியமே. பத்து ஆண்டுகளில் பொதுமக்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு நாளும் நிம்மதியை தொலைத்த நாள்கள்தான்.

பணமதிப்பிழப்பு, கருப்புப்பணம் மீட்பு என தொடங்கி போலியாய்- பொய்யாய் சித்தரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்கள், மக்களை இன்னமும் பதறவைத்தபடி தான் இருக்கிறது. உச்சத்துக்குப் போன அதானி -அம்பானிகளின் வளர்ச்சியும் மும்மடங்கு வீழ்ச்சிக்குப் போன நாட்டின் பொருளாதார நிலையும் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை. மக்கள் பிச்சைக்காரர்களாய் தவித்த கொரோனா காலகட்டத்தில், சொந்த மாநிலங்களுக்கு நடந்தேபோய் செத்துப் போன கொடூர நினைவுகளை, உயிரோடு இருப்பவர்கள் யாரும் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். நாட்டின் பிரதம மந்திரி, நாட்டுக்கானவர் அல்ல- அவர் தனியாருக்கானவர் என்பதை பறைசாற்றுவது போல, “பி-எம் கேர் ஃபண்ட்” வரவுகளை பிரைவேட் ஆக்கிக் கொண்ட நிகழ்வுகள், இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு கரும்புள்ளியே. எதிர்க்குரல் எழுப்பினால் சிறை, ரெய்டு, கைது, வழக்கு என்று பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை நோக்கி நகரும் கரங்கள், சட்டத்தின் கரங்களோ தர்மத்தின் கரங்களோ அல்ல என்பதை உரத்துச் சொல்லலாம். டெல்லி முதலமைச்சர் கைது – போராட்ட விவசாயிகள் மீது டிராக்டர் ஏற்றி கொலை முயற்சி போன்ற ஓரிரு சம்பவங்களை நினைத்துப் பார்த்தாலே பகீர் என்கிறது.

அந்த வகையில் மத்தியில் ஆளும் நரேந்திரமோடி தலைமையிலான பாஜகவின் சாதனை எதுவென்று பார்த்தால் மக்களின் வேதனை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகும்படி பார்த்துக் கொண்டதுதான். தமிழ்நாட்டு அரசியல் வாயிலாக மத்திய அரசின் அரசியலை பார்த்தாலே இந்தியாவிலிருக்கும் பாஜக ஆளாத மாநிலங்கள் படும் வேதனையை புரிந்து கொள்ளலாம். அவர்களெல்லாம் பாஜக, இல்லையென்றால் பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இந்தியா மீது போர்தொடுத்து இந்தியாவை அழித்துவிடும் என்ற கூற்றை ஏற்க மறுத்து எதிர்க்குரல் கொடுத்த மாநிலத்தவர்களே.

போராடி பொன்முடிக்கு மீண்டும் மந்திரி பதவி, அதைவிட போராடி, செந்தில் பாலாஜியை மந்திரியாக வைத்திருக்க துடித்த துடிப்பு- இதையெல்லாம் பண ஆதாயமாக மட்டும் திமுக என்ற கட்சி, தமிழ்நாட்டில் செய்திருக்குமா என்று பார்த்தால் அதற்கு வாய்ப்பு இல்லை. திமுகவில் பணத்துக்கு பஞ்சம் இல்லை. பொன்முடியையும் செந்தில் பாலாஜியையும் திமுகவால் விட்டுக் கொடுக்க முடியாமல் போன காரணம் பாஜகதான். பாஜகவின் சார்பில் தமிழ்நாடு ஆளுநராக வேலை பார்க்கும் ஆர்.என்.ரவிதான். பழிச்சொல்லுக்கும் இழிச்சொல்லுக்கும் ஆளாவோம் என்று நன்கு தெரிந்தும், பாஜகவோடு ‘சண்டை’ செய்ய திமுக தயாரானது ! அந்த சண்டையின் வெற்றியைத்தான் பொன்முடிகளும், செ.பா.க்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவை எதிர்ப்பது மட்டுமே இலக்கு என்ற ரூட்டை, திமுக கையில் எடுத்தது. அதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. அதேவேளையில், திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக உறவு இருப்பதாக எதிர்த்தரப்பும், ‘ரூட்’ எடுத்தது. “பாஜகவின் பி – டீம் நீங்கள் தான்” என்று திமுகவும் அதே ‘ரூட்’ டை அடுத்தடுத்து அதாவது மீண்டும் மீண்டும் கையிலெடுத்தது. இப்படி, தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் கைகொண்ட பிரசார ஆயுதமே பாஜக என்ற கட்சியின் இருப்பை உறுதிப்படுத்த ஆரம்பித்து, பாஜக தமிழ்நாட்டில் நிலை பெறவும் துணை போனது. இதுதான் உண்மை.

நாட்டிலேயே கடைசி கட்சியாக தேர்தலுக்கு ஐந்துநாள்கள் இருக்கும் போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது, பாஜக. “மீண்டும் (?) ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் திட்டம் அமல்படுத்தப்படும்” என்பது பிரதான வாக்குறுதி. தமிழ்நாட்டு மக்கள் வாக்குகளை குறிவைத்து, உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்பது போன்ற சில வாக்குறுதிகளும், மோடி கொடுத்துள்ளார். “தமிழை முழுமையாக பேசமுடியவில்லை, தமிழனாக பிறக்க முடியவில்லை என்ற வேதனை வாட்டி எடுக்கிறது” என்று மேடையில் மோடி முழங்கிய அடுத்த சில நிமிடங்களில் அகில இந்திய வானொலி நிலையம் பெயர் ஆகாஷவாணி என்று மாறுகிற அளவுக்குத்தான் இவர்களின் தமிழ்ப்பற்று என்பது கண்கூடு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பாஜகவினர், குறிப்பாய் பாஜகவின் தமிழ்நாட்டுப் பிரதிநிதியான ஆளுநர் ஆர்.என்.ரவி, போன்றோர் அளிக்கும் மரியாதையை அடித்தட்டு மக்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள்.

தமிழ்மொழிக்கு ஒதுக்கியதை விட மூன்று மடங்கு நிதியை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கியும்- தமிழ்வழி சித்த மருத்துவத்துக்கு ஒதுக்கியதை விட பலமடங்கு ஆயுர்வேத மருத்துவத்துக்கு ஒதுக்கியும், மத்திய பாஜக அரசு, தமிழுக்காக தமிழ்நாட்டுக்காக தமிழ் நாட்டு மக்களுக்காக செய்து வரும் தொடர் சாதனைகளின் பட்டியல் நீளமானது. பாஜக ஆளாத அத்தனை மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. விலைவாசி உயர்வை பேசினால், ‘நான் தக்காளி, வெங்காயம் சாப்பிடுவது இல்லை’ என்று பதிலளித்தும், ‘கல்விக்கடனை ரத்து செய்ய முடியாது’ என்று அடம்பிடித்தும் கம்பீரமாய் (?!) நிற்கும் நிதி மந்திரி வாழும் நாட்டில் வாழ்வதை விட வேறு பெருமை நமக்கு ஏதாவது உள்ளதா?

சனாதனத்தை போற்றியவர்கள் வள்ளலார், அய்யா வைகுண்டர் என்று தங்கள் பிரதிநிதி ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் பேசுவதும், சன்மார்க்க வழி வந்தோரும்- அய்யா வைகுண்டர் பின் தொடர்பாளர்களும், திருப்பி அடித்ததும் ஓட்டம் பிடிப்பதுமாக தமிழ்நாட்டில் பாஜகவின் ஆடுபுலி ஆட்டம் அருவெறுப்பானது. மக்களாட்சி தத்துவத்தில் நிலைபெற்றிருக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாவை, ‘அதிபர்’ நாடாக்கி, பின்னர் அதுவே மன்னராட்சி நாடாக மாற்றும் வேலைக்குதான் பாஜக, முழுமூச்சோடு வேலைபார்க்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் மனிதவாழ்வின் மாண்பு. கீழோன் மேலோன் பிறப்பால் இல்லை. உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பது மனித குலத்தில் எப்போதுமே இல்லை. இதுதான் தமிழ்நாட்டின் வழிவழி வாழ்வியல் நெறி. ஆனால் பாருங்கள், எந்தவொரு விளக்கமும் இதுவரை கொடுக்காமல் சனாதனம் என்றால் இந்துமதம், இந்துமதம் என்றால் சனாதனம் என்று அதற்கான ஒரு வடிவத்தை கட்டமைத்துள்ள விதத்தில் தான் பாஜகவின் வெற்றிநோக்கிய உத்தியும் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கையுள்ள அனைவருமே பாஜக உறுப்பினர்கள் என்று சொல்வது போல்தான் இந்த கட்டமைப்பும். அதுவே தான் பாஜகவையும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தையும் மண் கவ்வ வைக்கப் போகிறது.

ந.பா.சேதுராமன்

@dmk @bjp @admk @Congress @Parliament @assembly @tamilnadu @India

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *