கிராமப்புற நூலகங்களில் ‘தினமலர்’ வருவது இல்லை. முற்றிலும் நிறுத்தி விட்டார்கள்.
கிராமத்துக்கும் நகரத்துக்கும் மையமாக இருக்கும் புறநகர்ப் பகுதிகளிலும் ‘தினமலர்’
நூலகங்களுக்கு வருவது இல்லை. இம்மாதம் (மே -2023) 26 ஆம் தேதி முதல், நகர்ப்புற நூலகங்களுக்கும் ’தினமலர்’ வருகை முற்றிலும் ரத்து ஆகியுள்ளதாக தெரிகிறது.
ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ’முரசொலி’ யைக்கூட யாராவது தெரிந்தவர்கள் கொண்டுவந்து நூலகங்களில் வைத்து விட்டுப் போவதைப் பார்த்திருக்கிறேன்; ஆனால்
அப்படி வைத்து விட்டுப் போகிற இடத்தில்கூட அப்போது ‘தினகரன்’ நாளேடு இருந்தது இல்லை.
அம்மையார் ஜெயலலிதாவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் ஆட்சிகளில் அந்நிலை மாறியது. ’தினகரன்’ வருகை இருந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள், பத்திரிகையாளர் குழுக்(கமிட்டி)கள் மற்றும் நூலக ஆணைக்குழுக்கள் இதையெல்லாம்
கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை.
விமர்சனங்கள் குறித்த பெரியாரின் பார்வை, ‘பொது வாழ்க்கைன்னு வந்துட்டா, ஈனமானத்தையெல்லாம் பாத்துக்கிட்டிருக்க முடியாது’ என்பதாக இருக்கிறது. பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், முந்தைய
ஆட்சியாளர்களே செய்திருந்தாலும், அதே தவறை செய்யலாமா ?
கல்லடி பட்டால்தான் அது மாமரம் ! கல்லே படக்கூடாது என்றால்
அதன் பெயர் சாமரம்…
’இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்’ -குறள்.
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான். (மு.வரதராசனார்)
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் – சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் – பகையாய்க் கெடுப்பார்
இல்லையாயினும் தானே கெடும். (பரிமேலழகர்)
கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும். இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது. (மணக்குடவர்)
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் -குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; கெடுப்பார் இலானும் கெடும்- தன்னைக்
கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான். (தேவநேயப் பாவாணர்)
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும். (சாலமன் பாப்பையா)
அறிஞர் பெருமக்கள் பலர் இந்தக் குறளுக்கு இப்படி பொழிப்புரை செய்துள்ளனர். தமிழ்நாட்டை
ஐந்துமுறை ஆட்சி செய்தவரும் திமுக தலைவராகவும் இருந்த மு.கருணாநிதியும் இந்தக் குறளுக்கு பொழிப்புரை செய்துள்ளார்.
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
(மு.கருணாநிதி)
நன்னி !
ந.பா.சேதுராமன்