பற்களை உடைத்து விசாரணை ?பயிற்சி ஐ.பி.எஸ். மீது புகார்…

விசாரணைக்கு அழைத்து வரப்படும் பொதுமக்கள் மீது மிருகத்தனமாக பாய்ந்து பற்களை உடைத்து ஆனந்தம் அடைந்ததாக பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியான பல்வீர்சிங் மீது புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டு கேடரில் யுபிஎஸ்சி தேர்ச்சி பெறும் (குடிமைப்பணி) வடமாநில வெற்றியாளர்களுக்கு பொதுவாகவே நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தான் போஸ்டிங் ஏரியா எனலாம். அப்படி பாரம்பர்யமான போஸ்டிங் ஏரியாவில் போஸ்டிங் ஆனவர்தான் பல்வீர்சிங்.

குடும்பத்தகராறு, சிசிடிவி கேமரா உடைப்பு, கொடுக்கல் வாங்கல், வாடகை பிரச்சினை – இப்படி சிறு சிறு விவகாரங்களையும் பயிற்சி ஐபிஎஸ் (ஏ.எஸ்.பி. – கூடுதல் எஸ்.பி.) பல்வீர்சிங், அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேசனில் வைத்தே சில நிமிடத்தில் தீர்ப்பை கொடுத்து விடுவார் என்பதுதான் குற்றச்சாட்டே. அப்படி விசாரித்த முறைதான், ‘பல் உடைப்பு, விதைகள் நசுக்கல்’ போன்றன என்பதே குற்றச்சாட்டு. பொது

ஆண்களின் உயிர்நாடியான விதைப் பைகளை நசுக்குவது, பற்கள் மீது கருங்கற்களை வைத்து தேய்த்து தேய்த்து பின்னர் கொறடாவை வைத்து பிடுங்குவது விசாரணை முறைகளில் இருந்ததாக புகார்தாரர்கள் சொல்வதுதான் அலற விட்டுள்ளது. அந்தவகையில் டபுள் டிஜிட்டல் கடந்த எண்ணிக்கையில் முன் பற்கள் இல்லாத இளைஞர்களை உள்ளூரில் பார்க்க முடிகிறது.

ஊர் இளைஞர்கள் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் கொடுமைகள் செய்ததாக விரிவாக வீடியோ வெளியிட்ட பின்னரே விவகாரம் பெரிதாகி, பல்வீர்சிங்கை கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைத்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்தர் பாபு உத்தரவிட்டிருக்கிறார்.

அம்பாசமுத்திரம் சிவந்திபுரம் மாயாண்டி மன்ற இளைஞர்களின் தொடர் வீடியோக்களும், பற்களை கொறடாவால் பிடுங்கி எறிந்ததாக ஜமீன் சிங்கம்பட்டி சூர்யா கதறும் வீடியோக்களும் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சிக்க வைத்ததாக கூறப்படுகிறது. மாவட்ட போலீஸ் எஸ்.பி. ப்பி.சரவணன், இது குறித்து விசாரணையை தொடங்கி விட்டதாக தெரிகிறது.

குடிமைப்பணிகளில் (UPSC) தேர்வாகும் எதிர்கால அதிகாரிகளுக்கு முதல் இரண்டரை ஆண்டுகள் பயிற்சிகாலமே. பயிற்சிக்காலத்தில் இவ்வளவு கொடூரத்தை யாரும் செய்யத் துணிவது இல்லை.

மனித உரிமை அமைப்புகள், சிறைக் கொடுமைகள் குறித்து பேசுகிறவர்கள், இடது -வலது- மய்யம்-கழகம் உள்ளிட்ட எந்த ஏரியாவிலிருந்தும் இது குறித்து யாரும் அக்கறையுடன் பேசியதாக தெரியவில்லை. பண்ருட்டி சமஉ வேல்முருகன் அவர்கள் சட்டசபையில் பேசவிருப்பதாக தகவல் வந்துள்ளது சற்றே ஆறுதல்.

சட்டம் ஒழுங்கை பராமரித்து உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய ஐபிஎஸ் பதவியை இந்தளவுக்கு கீழிறங்கி பயன்படுத்தும் மனநிலை ஆபத்தானது! விசாரணை முடிவில் தான் உண்மை முழுதாய் வெளிவரும் என்றாலும் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் உடைபட்ட பின்னணியை லேசில் விடமுடியாது…

நாட்டில் பலருக்கு (ம்) தேவைப்படும் ஒன்று உளவியல் சிக்கலை களைவது – மன அழுத்தம் போக்குவது மட்டுமல்ல, சட்டத்துக்கு உட்பட்டே எல்லாவற்றுக்கும் தீர்வு காண முனைவது…

ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *