கலெக்டர் மணிகண்டன் உடும்புப்பிடி! கலங்கிப்போன நிலமோசடி டீம்…


.காரைக்கால் மாவட்டம் முழுவதும் பல கோயில்களில் அறங்காவல் குழு மற்றும் தனி அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு ”அரசியல் மினி, மேக்சி, மெகா” புள்ளிகள் கைவரிசை காட்டி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
கோயில் நிலம், கோயில் மனைகளில் வாடகை, வணிக நிறுவனங்கள், கோயில் நிலங்கள் சட்ட விரோத ஆக்கிரமிப்பு, அரசியல் பின்புலத்துடன் சட்ட விரோத கட்டுமான ஆக்கிரமிப்பு குறித்தும் மாவட்ட ஆட்சியர் மூலம் அரசு விவரங்களைக் கோரியிருக்கிறது.
மேலும், விவசாயத்துக்காகவும், கோயில் பரிபாலனத்துக்காகவும் கொடையளிக்கப்பட்ட பலகோடி மதிப்பிலான நிலங்கள் தனி நபர்களுக்கும், வணிகர்களுக்கும், ஊருக்கே சம்பந்தமில்லாத வெளி மாநில நபர்களுக்கும் தனி அதிகாரிகளால் வழங்கப் பட்டிருக்கின்றன.
கோயில் அறங்காவல் குழுவை தவறு செய்வதற்கும், முந்தைய தவறுகள், நில திருட்டு வேலைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கும் அரசியல் புள்ளிகள் நியமித்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இந்து சமய ஆட்சித்துறையின் சட்டத்துக்கு விரோதமாக கோயில் நிலங்களை பெயர்மாற்றம் செய்தும், கிரயப்பத்திரம் செய்தும், பிளாட்டுகளாக மாற்றி விற்றதில் காரைக்காலில் மட்டும் ரூ.5000- (ஐந்தாயிரம் கோடி ரூபாய்) கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புக்கு (NIA) புகார்கள் ஆதாரங்களுடன் அனுப்பப்பட்டிருக்கின்றன.
புதுச்சேரி சிறிய மாநிலம் என்ற போதும், அதிகளவில் கோயில் நில மோசடிகள், வில்லியனூர், ராஜ்பவன், திருநள்ளாறு காரைக்கால் வடக்கு, திருப்பட்டினம், கோட்டுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் அதிகமாக காணப்படுவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கோயில் நிலங்களை சட்ட விரோதமாக பிளாட்டுகளாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றி விற்ற ஊழல் விவகாரம் புதுச்சேரி அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காரைக்கால் ஜிப்மர் அருகில் பார்வதீஸ்வரர் கோயில் நிலத்தை முந்தைய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சனின் போலி கையெழுத்தை போட்டு ஆளும் அரசியல் புள்ளிகள் செய்த பெரும் மோசடி வெட்ட வெளிச்சமாகி யிருக்கிறது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், புரோக்கர்கள் போர்வையில் திரியும் மோசடிக்கும்பல் விரைவில் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏற்றப்படும் கண் கொள்ளா காட்சியையும் காரைக்கால் மக்கள் தரிசிக்கக் கூடும்.
இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர், டாக்டர் டி. மணிகண்டன் தலைமையில் கோயில்கள் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் முன்னிலையில் அனைத்து கோயில்களின் கோயில்களின் தனி அதிகாரிகள், அறங்காவல் குழுவினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. காரைக்கால் மாவட்டம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை, மனைகள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் குறித்த முழு புள்ளி விவரங்களை சேகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தம்பி.மாரிமுத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *