சென்னை பெரம்பூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் சுற்றுவட்ட மதில் சுவற்றின் வெளிப்புறத்தில் அப்பகுதியில் தீவனம் தேடி சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் மதில் சுவற்றின் அருகே படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்தன. அப்போது 6 அடி உயரமுள்ள அந்த மதில் சுவரானது திடீரென இடிந்து அங்கிருந்த மாடுகள் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மூன்று கறவை மாடுகள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உயிரிழந்த மாடுகளை உடற் கூராய்வுக்காக அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுப்புற மதில் சுவர் கடந்த சில ஆண்டுகளாகவே சிதிலமடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே என்கின்றனர் பொதுமக்கள்.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அந்த சுவற்றை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக மதில் சுவர் எழுப்புவதற்கான நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதன் விளைவு இன்று மூன்று மாடுகளின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது என்பதோடு நல்வாய்ப்பாக விடுமுறை நாள் என்பதால் மாணவிகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை என்பதையும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
P.K.M.