என்ன மதன்… ரோட் சைட் கடைல நேத்து சூப் உறிஞ்சுக்கிட்டு நிக்கிற, வீட்ல சூப் வெச்சுத் தர ஆளில்லையா என்றேன்.
‘எலும்பு சூப் தலைவா அது. நாம வீட்டுக்கு எலும்ப வாங்கிட்டுப் போயி குடுத்து, அத வீட்டம்மா சூப்பு வெச்சு நமக்குக் குடுக்கறதுன்னு பெரிய பிராசஸ் ஆச்சே அது!’
ஆமா, என்ன சூப்பு அது, எதுக்கு சாப்பிடறே, வெறும் டேஸ்ட்டுக்குத்தான்னா நீ ஒன்னும் சொல்ல வேணாம்…
‘இல்லேல்ல தலைவரே… காரணமாத்தான் சாப்பிட்டேன், எலும்பு சூப்பு அது. நமக்கு நுரையீரல்ல நிறைய சளி அடைச்சுக்கிட்டிருக்கு, சூடா சூப் சாப்பிட்டா சளி கறைஞ்சுரும்ன்னு சொன்னாங்க’…
அடுப்ப பத்த வெச்சுட்டு நீ மேல ஏறி உக்காந்துக்கிட்டா, வேற எங்கெங்க சளி அடைச்சிருக்கோ எல்லாமே மொத்தமா கரைஞ்சிரப் போவது… அடுப்ப ஒரே நாள் பத்த வெச்சா போதுமே மதன் !
‘தலைவரே, உங்க நக்கலுக்கு அளவே இல்லாமப் போயிருச்சு… நான் சூப் குடிக்கறதையே நிறுத்திடறேன், வேற நல்ல வழி இருந்தா சொல்லுங்க செய்யறேன்’
கற்பூரவள்ளி இலை கிடைச்சா, நாலஞ்சு இலைய எடுத்துக்க. கற்பூரவள்ளிக்கு, வள்ளியில சின்ன ல்லு போடணுமா, பெரிய ள்ளு போடணுமான்னு எதாவது கேக்கற ஐடியா இருந்தா அடுத்தவாரம் கேளு, அப்பத்தான் நான் உள்ளூர்ல இருக்க மாட்டேன். கற்பூரவள்ளி இலைங்களோடு, நாலஞ்சு மிளகும், ஒரு வெத்திலையையும் எடுத்துக்க. மொத்தத்தையும் தண்ணில போட்டு கொதிக்க விடு. ஜம்முன்னு ஒரு வாசம், நெடி அடிக்கறது போல தூக்கும். அந்த நேரம் பாத்து, தீயைக் குறைச்சுட்டு பாத்திரத்தை இறக்கி கீழே வெச்சுரு. உனக்குன்னா அரை டம்ளர் அளவும், சின்னப் புள்ளைங்கனா மூணு ஸ்பூன் அளவும் காலைலயும், சாயங்காலமும் நாலுநாளு சாப்பிட்டா போதும் மதன்… நுரையீரல்ல சேர்ந்து போயிட்ட சளி கரைஞ்சி வெளில வந்துரும். காசநோயி (டி.பி.) க்கும், நாள்பட்ட சளி ஓடறதுக்கும் இது சரியான மருந்து. உனக்கும் சூப் குடிச்ச எபக்ட்டு இருக்கும்.
கற்பூரவள்ளி இலைங்கள நல்லா கசக்கி சாறெடுத்து, அதை சுண்டற வரைக்கும் காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டுட்டு வந்தீன்னா, சிகரெட் புடிச்சு நுரையீரல்ல சேர்ந்துட்ட நிகோடின் உள்ளிட்ட நச்சுக்கள், அட்ரசை மாத்திக்கிட்டு வேற ஏரியாவுக்கு ஓடிப்போயிரும்…
’அடிக்கடி காய்ச்சல் வருது தலைவரே, அது வராம தடுக்க ஏதாவது வழி இருக்கா?’
‘செத்துரு மதன்’…
‘தலைவரே என்ன சொல்றீங்… ?’
யோவ், மண்டைன்னு ஒன்னு இருக்கறவரைக்கு சளின்னு ஒன்னு இருக்கத்தான்யா செய்யும். காய்ச்சல் வர்றதே, உன் உடம்பை சூடாக்கி உன் கூட விளையாடறதுக்கு இல்லே. வேறொரு உடல் உபாதை உனக்கு இருக்கு, அதை எதிர்த்து உன் பாடி பைட் பண்ணுது, அவ்வளவுதான் மேட்டரு. சிக்குன்குனியா, டைபாய்டு, மலேரியா, கொரோனா, ஒமிக்ரான்கறதெல்லாம் உன்னோட பாடியை பைட் பண்ண விடாம தடுக்கற அளவுக்கு பெரிய லெவல் பைட்டர்ங்க அவ்வளவுதான், அதுக்கும்தான் வைத்தியம் பாக்குறாங்க இல்ல… சரி உன்னோட காய்ச்சலுக்கு வர்றேன். கற்பூரவள்ளி இலைங்களை கசக்கி அந்த சாறை உள்ளுக்கு எடுத்துக்கிட்டாலே காய்ச்சலு ஓடிரும். அதே சாறை நெஞ்சி, கழுத்து, நெத்தி, முழங்கை, முழங்கால்ன்னு விட்டு லேசா தேய்ச்சாலும் நீ சொல்ற ஜூரம்கற காய்ச்சலு ஓடிரும். சாறு பிழிய கஷ்டமாருந்தா இலைய மட்டும் போட்டு தேய்ச்சி விடு, அதுவே சாறு பிழிஞ்சுக்கும்.
அதே கற்பூரவள்ளி இலை சாறுல நல்லெண்ணெய கொஞ்சங் கலந்து நெத்தில பற்று போட்டீன்னா, ஜூரத்தால வர தலைவலியும், சாதாரண தலைவலியும் போயிரும். அந்த சாறுல தேன் கலந்து உள்ளுக்கு எடுத்தாலும் உடம்பு லேசாய்டும். அதே சாறை கொதிச்ச தண்ணில விட்டு ஆவி பிடிச்சாலும் தலைவலி, சளி, இருமல், காய்ச்சல் ஈஸியா குணமாய்டும்.
உன்னோட ஸ்கின் (தோல்பகுதி)ல அரிப்பு, சொறி, படை மாதிரி ஏதாவது இருந்தாலும், அதே கற்பூரவள்ளி சாறை தொடர்ந்து விட்டுட்டு வந்தீன்னா, நல்ல ரிசல்ட் இருக்கும்.
கற்பூரவள்ளி இலைங்கள அடிக்கடி மென்னு தின்னுக்கிட்டு வந்தீன்னா, சிறுநீரகங்களில் அதிகமா சேருற உப்புகள கரைச்சு, சிறுநீரகங்கள நல்லபடியா காப்பாத்திக் கொடுக்கும்…
’சாதாரண கற்பூரவள்ளில இவ்வளவு விஷயம் இருக்கா தலைவரே?’
“டேய் வென்ரு… கற்பூரவள்ளி மட்டும் இல்லே, எந்த மூலிகையும் சாதாரணமானது இல்ல… மனசன் தாண்டா சல்லிப்பய… எது எதுக்குப் பயன்படுதுன்னே தெரியாம, பார்த்தீனிய செடி மேலயும், கருவேலம் முள்ளு மரத்து மேலயும் காரணமே தெரியாம பாசம் வெச்சிருப்பான்…”
எர்ணாவூர் பச்சிலை நம்பி