திருவள்ளூர் மாவட்டம், ஏலாவூர் அருகே போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், 15 கிலோ தங்க நகைகள், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதால் அவற்றை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஏலாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துறை அதிகாரிகள் வாகனத் தணிக்கை (சோதனை)யில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் இருக்கையின் கீழ் மூன்று பைகளில் சுமார் 15 கிலோ எடையுள்ள 8 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
நகைகளை கொண்டு வந்தவர் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த சரவணன். சேலத்தில் நகைக்கடை மேலாளராக வேலை செய்வதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிவித்தார். நகைக்கடை அதிபர் சொல்படி விசாகப்பட்டினத்தில் உள்ள நகைக்கடைகளில் புதிய ரக நகைகளை விற்பனைக்காக ஆர்டர் எடுத்துக் கொண்டு சக ஊழியர் காளிமுத்துவோடு சேலத்திற்கு செல்வதாக சரவணன் தெரிவித்தார். சரவணன் கையில் கொண்டு போன நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர், அந்த நகைகளை பறிமுதல் செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவலின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கே வந்து நகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்.பொன்.கோ.முத்து