திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஜெயஸ்ரீ நகரில், 54 சென்ட் பரப்பளவில், ஒரு இ(சு)டுகாடு இருக்கிறது. ஒரு சமூகத்தவர் மட்டும் பல ஆண்டுகளாக அந்த இடுகாட்டை பயன்படுத்தி வந்ததாக சொல்லப் படுகிறது. இந்நிலையில், மற்ற பிரிவினரின் உடல்களையும் தகனம் செய்யும் வகையில் பேரூராட்சி நிர்வாகம், எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை நேற்று தொடங்கியது.
இது பற்றிய தகவல் பரவியதும் இடுகாட்டை இதுநாள் வரையிலும் பயன்படுத்தி வந்த சமூக மக்கள், அங்கு திரண்டனர். தகனமேடையை பொதுவானதாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அங்கிருந்து பலவந்தமாக அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.
இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் கருப்புகொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். எரிவாயு தகன மேடை அமையவுள்ள இடத்தை முற்றுகையிட்டு கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவும், கட்டுமானப் பொருட்களை அங்கிருந்து அகற்றவும் முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உண்டானது.
மாவட்ட கூடுதல் போலீஸ் எஸ்.பி. ஹரிகுமார் பேச்சு வார்த்தை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்பது என பேச்சு வார்த்தையின் இறுதியில் முடிவானது. போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. பா.ம.க. ஆதரவுடன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி.சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொன்.கோ.முத்து