
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஏற்பாட்டில் படகுபோட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெற்றி அணிக்கு முதல் பரிசாக கோப்பையுடன் ஒரு லட்ச ரூபாய் பதக்கமும், இரண்டாம் பரிசாக கோப்பை மற்றும் 75 ஆயிரம் ரூபாயுடனான பதக்கம், மூன்றாம் பரிசாக கோப்பையுடன் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டி விதிமுறைகளாக கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் இலக்கு தீர்மானித்தும், கடலில் நடப்பட்டிருக்கும் கொடியை படகு சுற்றிவர வேண்டும் என்ற நிபந்தனை விதித்தும் போட்டி தொடங்கப்பட்டது. செம்பாச்சி பள்ளி உள்ளிட்ட 17 மீனவ கிராமங்களைச் சேர்ந்த படகுகள் இந்த போட்டியில் பங்கேற்றன. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் டி. எல். சதாசிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியினை தொடங்கி வைத்தனர், இறுதியாக போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று கிராம அணியினருக்கு பரிசுகள் வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டபோது, போட்டியில் தோல்வி அடைந்த செம்பாச்சி பள்ளி மீனவர்கள் போட்டிக்கான விதிகளை முறையாக வகுக்கவில்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடலில் நடப்பட்டுள்ள மூன்று கொடிகளை சுற்றி வர வேண்டும் என நிபந்தனை இருந்த நிலையில் அங்கு நடப்பட்டிருந்த மூன்று கொடிகளை சுற்றி வந்த தங்களுக்கு பரிசுகளை தராமல் ஒரு கொடியை மட்டும் சுற்றி வந்த படகுகளுக்கு பரிசுகள் வழங்குவதா என எதிர்ப்பு தெரிவித்து. விழா மேடையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட செம்பாச்சி பள்ளி மீனவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதனை அவர்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் விழா மேடையில் சம்பவத்திற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர், அதன்பின் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பொன்.கோ.முத்து

