ஆட்சியில் பங்கு|யாருக்கு லாபம்?

தவெக தலைவர் விஜய்யை, ‘மிஷினரி தயாரிப்பு’ என்று பாஜக தரப்பு பலமுறை சொல்லியிருக்கிறது. அதையே இன்னும் பலமுறை சொன்னாலும்; இன்டியா கூட்டணி தரப்பில் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ‘தவெகவே பாஜகவின் தயாரிப்புதான்’ என்பது அவர்கள் பார்வை.

விஜய்யின் ஜனநாயகன் சினிமா ரிலீஸ் தேதியை இறுதி செய்யப்போவது, ஜனநாயகனுக்கு முதல் போட்டவர்கள் அல்ல, சென்சார் ஃபோர்டுதான் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டதை முன்னிறுத்தி; “பாஜக எங்களுக்குத்தான் முதல்எதிரி” என்று தவெகவினர் சொல்லி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான், SK நடிப்பில் பராசக்தி படமும் ரிலீஸ் ஆகவிருக்கிறது. மொழிப்போர் உச்சம் தொட்ட 1965-களில், தமிழ்நாடு இருந்த நிலைமை குறித்தே பராசக்தி பேசுவதாக; கிடைக்கக்கூடிய தரவுகள் சொல்கின்றன. பராசக்தி கதை குறித்த கருத்துகளும், ஜனநாயகன் கதை குறித்த கருத்துகளும், சமூகவலைதள பக்கங்களில்; சண்டைக்காட்சிகளாக மாறிப்போய் கிடக்கின்றது.

அந்தவகையில், பாஜக பக்கம் தவெக போகப்போவது இல்லை என்ற புரிதல் தெளிவு. அதிமுக பக்கமும் தவெக போகமுடியாது, அங்கே கதை திரைக்கதை இயக்கம் தயாரிப்பு எல்லாமே பாஜகதான். தவெக நுழைவதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு காங்கிரஸ்தான். விஜய் கொடுத்த, ‘ஆட்சியில் பங்கு’ என்ற ஆஃபர்தான் காங்கிரசை வெகுவாய் ஈர்த்துள்ளது. டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்., தேமுதிக உள்ளிட்ட பலகட்சிகளை, ‘ஆட்சியில் பங்கு’ என்ற நேர்க்கோட்டில் பேச வைத்ததும்; விஜய் கொடுத்த அந்த ஆஃபர்தான். எடப்பாடியாரின் டெல்லிப் பயணமுடிவில் இதில் சற்றே மாற்றமும் இருக்கக்கூடும்… அப்போதும் காங்கிரஸ் மட்டும்தான் தனியாக துண்டிக்கப்படும் நிலை உண்டாகும். பாஜகவின் அப்படியான விருப்பத்தை பாஜகவை விட வேகமாக முன்னெடுத்துப் போவது காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஆபத்தாய் முடியும்…

விஜய், அப்படி வெளிப்படையாய் அழைப்பு விடுத்தும் யாரும் அதை ஏற்று தவெக தலைமையிலான கூட்டணிக்கு தங்களை ஒப்புக்கொடுக்க இதுநாள் வரையிலும் முன்வரவில்லை. எல்லோரும் ‘தலை’ யாக இருக்கவே பெரிதும் விரும்புகிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ‘உங்கள் தலைமையில் நாங்கள் இணைகிறோம், ஆட்சியதிகாரத்தில் பங்கு கொடுங்கள்’ என்று, தவெக அழைத்திருந்தால் ஒரு வேளை அது சாத்தியமாகி இருக்கும்.

தமிழ்நாட்டு அரசியலே, விஜய்யை மையப் புள்ளியாய் வைத்துத்தான் நகர்கிறது என்ற தோற்றத்தை, கட்டமைப்பு செய்து கொண்டிருப்பது, கூட்டணிக்கட்சிகளை பணியவைத்து; வேண்டியதை பெற்றுக்கொள்ள நகர்த்தும் காய்களாகவே தெரிகிறது. அது எல்லைமீறிப் போகும்போது, அறுவடை ஏரியாவில் பாஜக மட்டுமே இருக்கும்.

ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *