மூட்டுவலிபோவும், உடல் நாற்றம் நீங்கும்! ஆளை தேற்றும் நன்னாரி!

டேய்.. நன்னாரிப்பயலே, எப்படிடா இருக்கே ?
நள்ளிரவில் இப்படி ஒரு அழைப்பு. போனைப் போட்டு, நலம் (?) விசாரித்து தூக்கத்தைக் கெடுத்தான், அமீர் ! பள்ளித்தோழன். திருவண்ணாமலை வாசி. 1990-கள் வரை அக்மார்க் சென்னைக்காரன். எப்போது நினைவுக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் இப்படித்தான் லைனில் வருவான். அது ஆண்டுக்கு ஒரு முறை இருக்கும், ஒரேநாளில் பலமுறையும் இருக்கும். நேரம் காலம் என்றெல்லாம் கிடையாது!

இப்போது என்னோட ரவுண்ட் !
தூங்கத்தான் விடுவேனா, அவனை ?
”அண்ணன், வைகைப்புயல் வடிவேலு ஒரு படத்தில், “போடா நன்னாரிப் பயலே” என்று ஒருவனைத் திட்டுவார். காமெடிக்காக அந்த வார்த்தையை அவர் கையாண்டிருக்கலாம், உண்மையில் பார்த்தால், “வாடா என் நன்னாரிப் பயலே” என்றுதான் அவர், கூப்பிட்டிருக்க வேண்டும். கூப்பிட்டு மகிழும் அளவுக்கு நன்னாரியில் அவ்வளவு விஷயங்கள் இருக்குடா…”
“ சாரிப்னு சொல்றாங்க சில பேரு”…
”சாரிப்ங்கறது பொதுவா சொல்றது. ஆயுர்வேதத்துல அனாதமூலா (Anantmula.) ன்னு சொல்வாங்க. அதை அப்படிச் சொல்ல ஆரம்பிச்சு, ஐம்பது வருஷம்தான் இருக்கும். நன்னாரிங்கறது நம்ம அழைக்கறது. Indian Sarsaparilla ங்றது ஆங்கிலப் பெயரு.
நல் + நாரி. அதாவது நல்ல மணமுடையதுன்னு சொல்வாங்க. பாதாள மூலிகைன்னு அதுக்கு இன்னொரு பேரும் இருக்கு”…
“நம்மா ஊரல விளையறதா இது ?”
”தென்னிந்தியா நம்ம ஊருதானே? அப்படீன்னா, இது நம்ம ஊரு நிலைத்திணை தாவரம்தான். படரும் ஒரு கொடி இனம். கமகமன்னு வாசம் வீசும் கெட்டியான வேர், இதோட சொத்து. மொத்தத்துல இது மருத்துவ மூலிகை!”
”என்னென்ன பிரச்சினைக்கு இதை சாப்பிடலாம் ?”
”உன்னோட பிரச்சினை என்னன்னு சொல்லு, மொதல்ல அதைத் தீர்க்க வழியச் சொல்றன், அப்புறமா அதோட மொத்த விஷயத்தையும் சொல்றேன், நாலு பேருக்கு நீயும் எடுத்துச் சொல்லு”
”பசங்க உடம்பைக் கொஞ்சம் தேத்தணும்டா, எல்லாம் வீக்கா இருக்காங்க… அதே மாதிரி எனக்கு மூட்டுவலி இருக்கு, ரத்தம் கொஞ்சம் திக்கா (அடர்த்தி) இருக்கு, சரி செய்ய முடியுமா ?”
”நன்னாரி வேர்ப் பட்டையை ராத்திரி தண்ணில ஊறவெச்சிடு. காலையில அந்தத் தண்ணியை லேசா கொதிக்க வெச்சி, தேவைப்படற அளவுக்கு அதுல பாலோ, சர்க்கரையோ, வெல்லமோ சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்துட்டு வா. பசங்க, ஜம்முன்னு ஆளே மாறிடுவாங்க, நீயும் குடி. பசங்க மாதிரி நீயும் யூத் ஆயிடுவே.
அப்புறம் இன்னொன்னு கேட்டீயே. மூட்டுவலி போவணும், ரத்தம் அடர்த்தி குறைஞ்சி நல்லா ஓடணும் அதானே. அதுக்கும் இதே செயல்முறைதான், செஞ்சுப் பாரு.
மூலச்சூடு, மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமலுக்கும் இதுல தீர்வு இருக்குடா. பச்சை நன்னாரி வேர்ல ஒரு ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து அதை அரைச்சுக்க, கால் லிட்டரு காய்ச்சுன பாலுல அதைக் கலந்து குடிச்சுட்டு வந்தா, மேட்டர் ஓவர்”…
“அப்புறம் இன்னொன்னு… உன்கிட்ட கேக்கலாமா, வேணாமான்னு தயக்கமா இருக்குடா!”
“சும்மாக்கேளு, நா என்ன பீஸா கேக்கப் போறேன்”
”முடி ஓவரா நரைச்சுருச்சு”
”இதுக்கும் அதே அளவுதான். காய்ச்சுன பாலுல அரைச்சு வெச்ச, ஐந்து கிராம் நன்னாரி வேரைக் கலந்து குடிச்சுட்டு வரச் சொன்னேனில்ல. அது, மூலச்சூடு, மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமலுக்கு மட்டும் கிடையாது; தொடர்ந்து எடுத்துக்கிட்டா நரைமுடி நிறம் மாறி, கருப்புக்கலர்ல வந்துரும். ஆனா, அதுல ஒரு சிக்கல் இருக்கு மச்சான் ! இளநரைதான் மாறும், அதாவது முப்பத்தி ஐந்து வயசுக்குள்ள இருந்தா இளநரை மாற வாய்ப்பு 100 % இருக்கு. நீ, நாப்பதைக் கிராஸ் பண்ணி, மூணாயிரம் நாளுக்கு மேல இருக்குமே”
”கலாய்க்கற பாத்தியா… அதான் நான் உங்கிட்ட கேக்கறதே இல்லே”
“நான் எங்க மச்சான், கலாய்ச்சன்?, உன்னோட கேள்விக்கு பதிலச் சொன்னேன்”
“சுகர் கொஞ்சம் மேட்ச் ஆகியிருக்குன்னு வீட்ல சொன்னாங்க”…
“ஒவ்வொன்னா சொல்லிக்கிட்டே இருப்பே நீ. நான், நன்னாரியோட பலன் மொத்தமும் சொல்லிடறேன், உனக்குத் தேவையானத எடுத்துக்க. இன்னும் தேவைன்னா, அடுத்தவாரம் சண்டே டைம்ல பேசு. சொல்றன் கேட்டுக்க.
நன்னாரியோட வேர்ல மருத்துவக் குணம் கொஞ்சம் அதிகமா இருக்குறதால நன்னாரி வேருக்குத்தான் மவுசு அதிகம். அதிகமாப் பயன்படுத்துனா உடம்புக்கு குளிர்ச்சியைக் கொடுத்துடும் பாத்துக்க. உடம்புல இருக்குற உஷ்ணத்தைக் காலி பண்ணி, பாடிய குளிர்ச்சியாக்கிடும், சிறுநீர் நல்லா போவும். ரத்தம் நல்லா சுத்தப்படும். யுனானி வைத்திய முறையில ரத்த சுத்திகரிப்புக்கு நன்னாரியத்தான் சேர்க்கறாங்க, அமீர்.

பாரிச வாதம், தோல் நோய்ங்க, செரிக்காம இருக்கறதுன்னு பல விஷயங்களை இது சரி செய்யுது. நன்னாரி வேரை தேவைப்படற அளவுக்கு எடுத்துக்கிட்டு, மூணு பங்கு தண்ணி, ஒருபங்கு காயற மாதிரி காய்ச்சி எடுத்துக்க. அப்படியே குடிச்சுடாத. தொண்டை வெந்துடும். அப்புறம் அதை சரி செய்ய அதிமதுரத்தை ஊற வைச்சு குடிக்கற நிலைமைக்குப் போயிடும். காய்ச்சுன நன்னாரித்தண்ணியை அடிக்கடி குடிச்சுக்கிட்டு வா, சுகர்ரு (நீரிழிவு), வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், மேகநோய்ன்னு முக்கியமான டெரர் வியாதிங்க காணாமப் போயிடும். நாள்பட்ட வாதம் போகும். நான் ஆம்பிளைச் சிங்கம்டான்னு அடிக்கடி கத்துவே இல்லே, அது ஸ்ட்ராங்கா இருக்கவும் இது அதிகமாவே உதவும்.
உடம்புல வியர்வை நாத்தம் அதிகமா இருக்கா, கறி சாப்புடறதை மொதல்ல நிறுத்துன்னு சொல்ற ஆளுங்க இருக்காங்க. நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம். நம்ம பாரம்பர்யத்துல ‘ஊன் மருத்துவம்’ ன்னே ஒன்னு தனியா இருக்கு, அதை ஒரு நாள் சொல்றன்.
மிளகு. உப்பு. புளியோட நன்னாரியோட இலை, பூ, காய், கொடி, வேர் எல்லாத்தையும் ஒன்னு சேர்த்து அதுல நெய்யை விட்டு நல்லா வதக்கி தொண்ணூறு நாளு தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, உடம்புல வியர்வை நாத்தம் போயி, உன்னோட வியர்வையே வாசனை தைலம் மாதிரி கும்முன்னு மாறிடும்.
நன்னாரை வேரை தொடர்ந்து பயன்படுத்திக் கிட்டு வந்தா, கெட்ட உறவுகள்னால ஏற்பட்ட கொடிய நோயில் இருந்து தப்பிக்கலாம்ங்கறதையும் இந்த நேரத்துல உனக்கு சொல்லி வெக்கிறேன். ஏதோ ராணுவ ரகசியம் மாதிரி பல விஷயங்களை மூடி வெச்சு, மூடிவெச்சு, நம்ம ஊரு மருந்தையே நமக்கு தெரியாமப் பண்ணி வெச்சிட்டாங்க, தர்மவானுங்க. நன்னாரிக்கு எந்த நாடு காப்பிரைட் வாங்கி வெக்கப் போவுதோங்கற கவலையோடுதான் தினமும் தூக்கம் வராம கிடக்கிறேன் மச்சான்.
வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் மூன்றையும் பானையில போட்டு தண்ணி ஊத்தி வெச்சு குடிச்சுட்டு வந்த எங்க தாத்தன் ஆறுமுகமும், பெரிய தாத்தன் ஏகாம்பரமும், நூத்தியேழு வயசு வரைக்கும் வாழ்ந்திருக்காங்க. தாத்தனோட பெரிய புள்ளைங்க தெய்வசிகாமணியும், அருணாசலமும் இதை பெருமையா அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அருணாசலம்தான் நிறைய விஷயங்களை சொல்லுவாரு. அவரும் நூத்தியெட்டு வயசுல எதிர்பாராம (?) செத்துப் போயிட்டாரு… ’சாவற வயசா உனக்கு?’ ன்னு, தெய்வசிகாமணி தாத்தா அழுதுக் கிட்டு நின்னது இன்னமும் நினைப்புல, கண்முன்னால நிக்குது.
“எர்ணாவூர்ல உங்க தாத்தா சாவுக்கு போன அன்னைக்குத்தான் எம்ஜியாரு செத்துட்டாரு, ஞாபகம் இருக்கா, சேது?”
“நல்லாவே ஞாபகம் இருக்குடா. சரி, சொல்லவந்ததை மறந்துடப் போறேன்”
“வைத்தியம் சொல்ற உனக்கும் மறதியா, மொதல்ல அதுக்கு வைத்தியம் பார்றா”
”உனுக்கு சொன்ன இதெே நன்னாரிய ரெகுலரா எடுத்தாலே செல்கள், புதுப்புதுசா பாடியில உற்பத்தி ஆக ஆரம்பிச்சுரும். இந்த ஞாபக மறதி மட்டுமல்ல, ஐம்பது வயசுக்கு மேலே வர்ற நினைவுப் பிறழ்தல் அப்படிங்கற சமாச்சாரமும் இல்லாமப் போயிடும். ஞாபகம் இல்லையேன்னு தலையைப் பிய்ச்சுக்கும் போது மயிரும் கொட்டாது. ஆமாம், அமீர். மயிர்க்கால்களுக்கு நல்லவிதமா சத்து நன்னாரியில கிடைப்பதால, மயிரும் லேசுல கொட்டாது.
சொல்லப்போனா, பக்க விளைவுகள் இல்லாத இயற்கை ஸ்டீராய்டு இந்த நன்னாரி. உடம்புக்கு உடனடி குளுகோஸ் போல.
போற போக்குல எதையோ சொல்லிட்டுப் போயிட்டேன்னு நினைச்சுக்காத மச்சான். அவ்வளவும் அனுபவிச்சு, பயன்படுத்தி, ரொம்பப்பேரை தேத்தி விட்டுட்டு சொன்ன விஷயம்தான் இவ்வளவு நேரம் உன்கிட்ட பேசுனது.நாட்டுமருந்துதானேன்னு ஒரு கமாவும், கேள்வியும் எப்பவுமே இருக்கு. நாட்டுமருந்து, சித்தமருந்து, மூலிகை மருந்து, பாட்டி வைத்தியம் எல்லாமே நம்ம மண்ணோட பாரம்பரியம் நமக்கு கொடுத்த சொத்து. அதைக் காப்பாத்திக்காதவன் மனுசனே இல்லே… சரிடா போனை வெச்சுடட்ட்டுமா?”
“இனி நீ போனை வெச்சா என்ன, வெக்காம போனாத்தான் எனக்கென்ன, மணி இப்ப நாலரை. அரைமணிநேரத்துல பால் கடைக்குப் போவணும், மார்க்கெட் போவணும், போயிட்டு வந்து குளிச்சுட்டு எட்டு மணிக்கெல்லாம் கம்பெனியத் திறக்கணும். எம்ப்ளாயீஸ் இருபது பேருக்கு வேலையைப் பிரிச்சுக் கொடுக்கணும்”
”என்னமோ நான் உனக்கு போன் பண்ணி எழுப்பி விட்டமாதிரி சலிச்சுக்குற… வாடா நன்னாரிப்பயலே”…
… எப்பவோ போனை வைத்து விட்டான் அமீர் ! சிறுநீரகப் பாதுகாப்புக்கும் சிறந்தது நன்னாரின்னு சொல்றதுக்குள்ள போனை வெச்சுட்டானே…
எர்ணாவூர் பச்சிலைநம்பி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *