காணாமல் போன வாலிபர் குறித்த போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட பெண், ‘அந்த வாலிபரை வெட்டி கொன்று கடற்கரையில் புதைத்து விட்டோம்’ என்பதாக சொல்லியுள்ள தகவலும் அதன் பின்னணியையும் பேசுகிறது இந்தத் தொகுப்பு.
சென்னை என்.ஜி.ஓ. காலனி, நங்க நல்லூரரை சேர்ந்தவர், ஜெயக்ருபா. வழக்கறிஞர். நங்கநல்லூர் போலீசில் புகார்மனு ஒன்றை அளித்திருந்தார். மனுவில், தனது தம்பியும், சென்னை விமான நிலைய தனியார் நிறுவன ஊழியருமான ஜெயந்தன், எங்களோடு ஐந்துவருட காலமாக தங்கியிருந்து ஏர்போர்ட்டில் வேலை செய்து வந்தார். 2023 – மார்ச் 18-ம் தேதி பகல், வேலைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து சொந்த ஊர் விழுப்புரம் செல்வதாக சொல்லிவிட்டு சென்றார், ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை என தெரியவந்தது. சொந்த ஊரான விழுப்புரத்தில் விசாரித்த போது அங்கும் வரவில்லை என்று தெரிந்தது. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே இதுகுறித்து விசாரணை நடத்தி, காணாமல் தம்பியை கண்டுபிடித்து கொடுங்கள்- என்று சொல்லியிருந்தார். புகாரின் பேரில், போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் மாதவன், ஜெயந்தன் செல்போன் எண்ணை ஆய்வு செய்தார். அப்போது கிடைத்த தரவுகளின் அடிப்படையில், பாக்கியலட்சுமி என்ற பெண் சந்தேக வளையத்தில் வரவே, அது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அடுத்ததாக பாக்கியலட்சுமியை விசாரிக்க உத்தரவு கிடைத்தது. 2023- ஏப்ரல் 1-ஆம் தேதி, பாக்கியலட்சுமி விசாரிக்கப்பட்டார். அப்போது பாக்கியலட்சுமி சொன்னதாக வெளியாகியுள்ள தகவல் : என் சொந்த ஊர் புதுக்கோட்டை. 2023, மார்ச்-19 அன்று என்னைப் பார்க்க ஜெயந்தன் வந்திருந்தார். அவரை எனக்குத் தெரியும். அப்போது ஜெயந்தன் என்னுடன் திடீரென தகராறு செய்தார். எனக்கு அறிமுகமான சங்கர் என்பவரை உதவிக்கு அழைத்தேன். வந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து அப்போது ஜெயந்தனை கொலை செய்ய முடிவெடுத்தோம். அதன்படி ஜெயந்தனை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டினோம். கை மற்றும் கால்களை பாலிதீன் கவரில் சுருட்டி கட்டைப் பையில் வைத்து மறுநாள் (20.03.2023) அதிகாலை பஸ் ஏறி, சென்னை கோவளம் வந்தோம். பகல் ஒரு மணியளவில் கோவளம் கடற்கரை அருகில் ஜெயந்தன் உடலைப் புதைத்து விட்டோம். மீண்டும் புதுக்கோட்டை சென்றோம். 26-ஆம் தேதி பகல் 2 மணியளவில் வீட்டில் மிச்சமாக இருந்த ஜெயந்தனின் தலை மற்றும் வயிறை இன்னொரு பாலிதீன் கவரில் சுருட்டி சூட்கேசில் வைத்தோம். அங்கேயே கார் ஒன்று புக் செய்து அன்று மாலை, சென்னை செட்டிநாடு மருத்துவமனை அருகே வந்து இறங்கி காரை திருப்பி அனுப்பினோம். நன்கு பழக்கமான கோவளத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி வேல்முருகனை வரவழைத்தோம். அங்கிருந்து அவருடன் டூவீலரில் கோவளம் போய் ஜெயந்தன் உடலை கடற்கரைப் பகுதியில் புதைத்து விட்டோம்.
மூன்று வருடம் முன்பாக சென்னை தாம்பரத்தில் உள்ள கிரீன் லாட்ஜில் நான் இருந்த போது, ஜெயந்தனுடன் பழக்கம் ஏற்பட்டது. விழுப்புரம், மயிலம் கோயிலில் 2020-ஆம் ஆண்டு, வீட்டிற்கு தெரியாமல் ஜெயந்தன் என்னை திருமணம் செய்து கொண்டார். ஜனவரி 2021-ல் நாங்கள் பிரிந்து விட்டோம். அதன் பின்னே ஜெயந்தனை விட்டு பிரிந்து சொந்த ஊருக்குப் போய் விட்டேன் … இவ்வாறு விசாரணையில் பாக்கியலட்சுமி சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில் விசாரணையின் போது மேலும் பல முரண்பட்ட தகவல்களை போலீசாரிடம் பாக்கியலட்சுமி சொன்னதால், சென்னை மவுண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது தலைமையில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையின் பொருட்டு, பாக்கியலட்சுமியை அழைத்துக் கொண்டு சற்றுமுன் (2023 -ஏப்ரல் 3) கோவளம் கடற்கரைப் பகுதிக்கு சென்றுள்ளனர். நாளை காலை, இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் வெளியாகக்கூடும்.
-செல்வா-